ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்காக தொண்டு நிறுவனம் தொடங்க முன் வந்த மகாத்மா காந்தியின் 92 வயதான பேரன் மனைவியிடம் அனுமதி கொடுக்க அதிகாரி ஒருவர் ரூ.5000 லஞ்சம் கேட்டு 4 மாதமாக அலைக்கழித்த கொடுமை காந்தி பிறந்த குஜராத் மண்ணிலேயே நடந்துள்ளது.
தேச விடுதலைக்காக தன் ஆயுள் முழுக்க அயராது பாடுபட்டு சுதந்திரம் பெற்றுத் தந்த தேசத்தந்தை மகாத்மா பிறந்த குஜராத் மண்ணில், அவர் குடும்பத்தைச் சேர்ந்த 92 வயது மூதாட்டி ஒருவர் 4 மாதங்களாக அதிகாரி ஒருவரால் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் சுதந்திர இந்தியாவின் இன்றைய நிலையை தோலுரித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
மகாத்மாவின் பேரன் மனு காந்தி. அமரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றியவர்.இவருடைய மனைவி சிவ லட்சுமி காந்தி. இவரும் அமெரிக்காவில் வேதியியல் விஞ்ஞானியாக பணியாற்றியவர். அமெரிக்காவில் வசித்த இத்தம்பதியினர் ஓய்வுக்காலத்தை நிம்மதியாகக் கழிப்போம் என நாடு திரும்பி,குஜராத் மாநிலம் சூரத் அருகிலுள்ள பீம்ராத் என்ற கிராமத்தில் கடந்த சில வருடங்களாக வசித்து வந்தனர். மனு காந்தி கடந்த 2016ல் இறந்து விட, தனிமையில் இருந்த 92 வயதான சிவலட்சுமி காந்தி மகாத்மா வழியில் ஏழைகளுக்கு தொண்டு புரிய ஆசைப்பட்டார்.
தன் சேமிப்பு, ஓய்வூதியம் மூலம் ஆதரவற்ற மாணவர்களின் கல்விக்கு உதவ ஒரு தொண்டு நிறுவனம் தொடங்க முடிவு செய்தார். அதற்கான அரசு அனுமதி பெறுவதற்காக தன் உதவியாளர் பரிமல் தேசாய் என்பரை சூரத்தில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கும் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு துணை கமிஷை ராக ஏ.வி.பட்டேல் ஏதோதோ சாக்குப் போக்கு கூறி அலைக்கழித்துள்ளார். தொண்டு நிறுவனம் தொடங்கும் நபர் நேரில் வந்தால் தான் பைலில் கையெடுத்துப் போடுவேன் என்று கூறியுள்ளார். சிவலட்சுமி காந்தி 92 வயதானவர் என்றும் வீல்சேரில் தான் நடமாடுகிறார் என்பதால் அலுவலகம் அமைந்துள்ள 2-வது மாடிக்கு அவரை அழைத்து வருவது சிரமம் என்று பரிமல் தேசாய் எடுத்துக் கூறியுள்ளார். வேண்டுமானால் சொந்தச் செலவில் கார் பிடித்து உங்களை சிவ லட்சுமி வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று அதிகாரியிடம் கூறியதற்கு, அதெல்லாம் எங்கள் விதிகளில் இடமில்லை என்று கூறிவிட்டாராம். உண்மையில் அந்த அதிகாரி இது போன்ற அனுமதி வழங்க ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்குவார் என்ற தகவலறிந்து, தாமதத்திற்கு காரணம் லஞ்சம் கொடுக்காதது தான் என்று சிவ லட்சுமிகாந்தியிடம் பரிமல்தேசாய் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிவலட்சுமி வீல்சேரில் அமர்ந்த நிலையில் தனது மகன் மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு அலுவலகத்துக்கே நேரில் சென்றுள்ளார். அப்போதுதான் உடன் சென்றவர்கள் சிவலட்சுமி யார் தெரியுமா? காந்தி பேரனின் மனைவி . காந்தி குடும்பத்தையே இப்படி அலையவிடலாமா? என்று கேட்க, எரிச்சலடைந்த அந்த அதிகாரி, சர்தார் படேலும் தான் விடுதலைக்காக போராடினார். அவர் குடும்பத்தினர் யாரும் படேல் பெயரை கூறுவதில்லை. காந்தி குடும்பத்தினர் மட்டும் எதற்கெடுத்தாலும் அவர் பெயரை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? என்று கூறி 10 நிமிடத்தில் தொண்டு நிறுவன அனுமதிக்கான பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார். காந்தி குடும்பம் அலைக்கழிக்கப்பட்ட தகவலறிந்து செய்தியாளர்கள் அந்த அதிகாரியை கேள்வி கேட்க அது தான் வேலையை முடித்துக் கொடுத்து விட்டேனே? பின் ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்று எகிறிவிட்டு இப்போது துறை விசாரணை என்ற சிக்கலிலும் மாட்டியுள்ளார்.
சாதாரண இந்திய குடிமகன் ஒருவன் அரசு அலுவலகத்தில் பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை எதற்கெடுத்தாலும் லஞ்சம் கொடுத்தான் தான் விரைந்து காரியம் முடியும், இல்லாவிட்டால் காந்தி குடும்பத்தையே அலையவிட்டது போல அலைய வேண்டியதுதான் என்பது தான் இன்றைய இந்தியாவின் நிலை என்பதையே சூரத் அதிகாரியின் செயல் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டி விட்டது என்பதே உண்மை.