மசூத் அசார் விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் முட்டுக்கட்டை போடுகிறது. அவருடன் மோடி ஊஞ்சலாடி என்ன பயன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க, இந்தியா முயன்று வருகிறது. இது தொடர்பாக, இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியன, ஐநா பாதுகாப்பு சபையில், புதிய தீர்மானத்தை கொண்டு வந்தன.
எனினும், பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இவ்விவகாரத்தில், பிரதமர் மோடியின் செயல்பாட்டை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பதிவில், பலவீனமான பிரதமராக மோடி உள்ளார். சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை கண்டு அஞ்சுகிறார். சீனாவின் நடவடிக்கை குறித்து ஒருவார்த்தை கூட பேசாமல் மோடி மவுனம் காக்கிறார்.
மோடியின் ராஜதந்திரம், குஜராத்தில் சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடன் ஊஞ்சலாடியதோடும், டெல்லியில் அவரை ஆரத்தழுவியதோடும் முடிந்துவிட்டது என்று விமர்சனம் செய்துள்ளார்.