மத்தியபிரதேச மாநிலம் தின்தூரியில், பள்ளியில் கூடுதலாக உணவு கேட்ட சிறுமி மீது சத்துணவு ஊழியர் சூடான பாத்திரத்தை வீசியதால் அந்த சிறுமி பலத்த தீக்காயம் அடைந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் தின்தூரி மாவட்டத்தில் உள்ள ஓர் பள்ளியில் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒன்றாம் வகுப்பு படித்துவந்த சிறுமி, சத்துணவு ஊழியரிடம் கூடுதலாக உணவு கேட்டதால் அந்த ஊழியர் ஆத்திரமடைந்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, சிறுமிமீது பயறு வேகவைத்த சூடான பாத்திரத்தை வீசியுள்ளார். இதனால், சிறுமியின் முகம், கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த அந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடுமையாக தீக்காயத்தால் சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சத்துணவு ஊழியரின் இந்தச் செயல் பெற்றோர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குழந்தைகள் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாவதைத் தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.