இஸ்லாமியர்கள் என்ன பாகிஸ்தானியர்களா என்று காஸ்கன்ஞ் பகுதியில் நடைபெற்ற வன்முறை குறித்து நீதிபதி ராகவேந்திரா விக்ரம் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கன்ஞ் பகுதியில் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்துத்துவா அமைப்புகள் சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் தேசியக்கொடியுடன் அணி வகுத்துச் சென்றனர்.
அப்போது இஸ்லாமியர்கள் மற்றும், பாகிஸ்தானிற்கு எதிராக அவர்கள்முழக்கங்களையும் எழுப்பினர். பின்னர் அவர்களாகவே, இஸ்லாமியர்கள் தங்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் ராகுல் உபாத்யாய் என்ற ஹிந்து இளைஞர் ஒருவர் இறந்து விட்டதாகவும் செய்தி பரவியது. இதையடுத்து இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். வாகனங்கள், கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. கலவரத்தை அடக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்நிலையில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் கும்பல் நடத்திய வன்முறைக்கு பரேலி நீதிமன்ற நீதிபதி ராகவேந்திரா விக்ரம் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முகநூல் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் “இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் வேண்டுமென்றே பேரணியாக செல்வதும், அங்கு பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்களை எழுப்புவதுமாக ஒரு புதிய டிரண்ட் உருவாகி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இது எதற்கு? இஸ்லாமியர்கள் என்ன பாகிஸ்தானியர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். “பரேலி மாவட்டம் காய்லாம் கிராமத்திலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது. கற்கள் வீசப்பட்டதற்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது” எனவும் விக்ரம் சிங் குறிப்பிட்டுள்ளார்.