தேர்தல் பரப்புரையின் போது எடுக்கப்பட்ட நடிகை ஹேமாமாலினியின் புகைப்படம் டுவிட்டரில் கேலிக்கு ஆளாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா நாடாளுமன்ற தொகுதியில் நடிகை ஹேமாமாலினி போட்டியிடுகிறார். கடந்த முறை இதே தொகுதியில், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு மூன்று லட்சத்து 30 ஆயிரத்து 743 வாக்குகள் பெற்று, அவர் மகத்தான வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் மதுராவில் விவசாய பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். தங்க நிற புடவையில் தகதகவென மின்னிய அவர், வயலில் இறங்கி அறுவடை செய்தார். கேமிரா கலைஞர்கள் துணையுடன் அந்த காட்சிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அவரது டுவிட்டர் கணக்கு பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு உத்வேகத்துடன் பணிகளை தொடங்கியுள்ளதாக பதிவிட்டார்.
இந்த படங்களை கண்டவுடன் நெட்டிசன்கள் கொதித்து எழுந்து ஹேமாமாலினியை கிண்டல் செய்து வருகின்றனர். தேர்தல் என்று வந்து விட்டால் லைட் கேமிரா ஆக் ஷன் என அவர் புறப்பட்டு விடுவதாக தெரிவித்துள்ளனர். கடந்த முறை போல் இம்முறை மதுரா தொகுதி மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று ஹேமாமாலினிக்கு எதிராக அவர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால் விமர்சனங்களை கடந்து ஹேமாமாலினி வெற்றி பெறுவார் என்று அவரது ஆதராவளர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
‘