பொள்ளாச்சி பாலியல் விவகாரம் -கோவை புறநகர் எஸ்.பி. பாண்டியராஜன் டிரான்ஸ்பர்

by Nagaraj, Apr 1, 2019, 14:29 PM IST

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான கோவை புற நகர் மாவட்ட எஸ்.பி.பாண்டியராஜன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் பலரை ஒரு கும்பல் பாலியல் கொடூரத்தில் ஈடுபட்டது அம்பலமாகி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய இந்தக் கும்பலுக்கு அரசியல் பின்னணி இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரிலேயே, இந்த பாலியல் கொடூரங்கள் பற்றிய பகீர் தகவல்கள் அம்பலமானது.

இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளை காவல்துறை காப்பாற்ற முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் திருநாவுக்கரசு என்பவன் உள்பட 4 பேர் மட்டுமே குற்றவாளி என்றும், வேறு யாருக்கும் தொடர்பில்லை. அரசியல் தொடர்பும் இல்லை என்று தெரிவித்த கோவை புற நகர் எஸ்.பி.பாண்டியராஜன், புகார் தெரிவித்த பெண்ணின் பெயரையும், அடையாளத்தையும் பகிரங்கமாக வெளியிட்டார்.எஸ்.பி.பாண்டியராஜனின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து எஸ்.பி.பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்குத் தொடரப்பட்டது. பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை எஸ்.பி. வெளியிட்டதைக் கண்டித்த நீதிபதிகள், பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று எஸ்.பி.பாண்டியராஜனை இடமாறுதல் செய்யப்பட்டு, அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை புற நகர் மாவட்ட எஸ்.பியாக கோவை நகர துணை ஆணையர் சுஜித்குமார் புதிதாக நியமிக்கப் பட்டுள்ளார்.
மேலும் பொள்ளாச்சி டிஎஸ்பி மற்றும் ஆய்வாளரும் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Get your business listed on our directory >>More Tamilnadu News

அதிகம் படித்தவை