வேலூர் மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூரில் திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று நடைபெற்றது. அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், பேரத்தின் அடிப்படையில் அதிமுகவோடு பாமக கூட்டணி சேர்ந்திருப்பதாக குற்றம்சாட்டினார். வன்னியர் அறக்கட்டளை சொத்துகளை ராமதாஸ் அபகரித்திருப்பது தொடர்பான கோப்புகள் எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
திமுக இந்துக்களுக்கு எதிரி என்பது போல வேண்டுமென்றே, திட்டமிட்டு பிரச்சாரங்கள் நடைபெறுகிறது. கோவில் கூடாது என்பதல்ல, கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதுதான் திமுகவின் கொள்கை என்றார். மேலும் தமது மனைவி நாள்தோறும் கோவிலுக்கு செல்லும் வழக்கமுடையவர் என்றாலும் அதை தடுப்பதோ, கூடாது என்றோ சொல்வதில்லை என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது அச்சுறுத்தல் முயற்சி என்றும், அதற்கெல்லாம் திமுக அஞ்சப் போவதில்லை என்றும் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். முதலமைச்சர், அமைச்சர்கள் வீடுகளில் பணம் பதுக்கப்பட்டுள்ளது பற்றி புகார் தெரிவித்தால், வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்குமா? எனவும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.