பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் பிரியங்கா காந்தியை நிறுத்த காங்கிரஸ் அதிரடித் திட்டம் வைத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஆதரவளித்தால் பொது வேட்பாளராக பிரியங்கா போட்டியிடுவார் என்று தெரிகிறது.
இந்தத் தேர்தலில் நேரடி அரசியலில் குதித்துள்ள பிரியங்கா காந்தியின் வருகையால் உபியில் காங்கிரஸ் ஒரளவு தெம்பாக உள்ளது. பாஜக, சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகியவற்றை எதிர்த்து காங்கிரசும் இம்முறை உ.பி.யில் செல்வாக்கை நிலைநாட்ட முயல்கிறது. இதற்கு பிரியங்காவின் அரசியல் பிரவேசமும் கை கொடுக்கிறது.
இந்நிலையில் உ.பி.யின் ஏதாவது ஒரு தொகுதியில் பிரியங்கா போட்டியிட வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிடும் நிலையில் பிரியங்காவும் போட்டியிட்டால் காங்கிரசுக்கு கூடுதல் உற்சாகம் கிடைக்கும் என கருதுவதே இதற்குக் காரணம்.
ஆனால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பிரியங்கா இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கு எதிராகவே பிரியங்காவை இறக்கி விடலாமா? என்ற யோசனையில் காங்கிரஸ் மேலிடம் உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி வாரணாசியில் மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாததற்கு காரணமும் பிரியங்காவை நிறுத்தும் யோசனையில் உள்ளதால் தானாம்.
ஏற்கனவே சோனியா, ராகுல் ஆகியோருக்கு எதிராக ரேபரேலி ,அமேதி தொகுதிகளில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியிலும் ஆதரவளித்தால் பொது வேட்பாளராக பிரியங்காவை நிறுத்தி கடும் சவாலை உருவாக்கலாம் என்ற ரீதியில் காங்கிரஸ் யோசிப்பதாகவும், இதற்கு பிரியங்காவும் சம்மதித்துள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.