வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியைச் சேர்ந்த ஆதிவாசி பெண் ஒருவர் இன்று வெளியான யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு ராகுல் காந்தி ட்விட்டரில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தின் தொழுவண்ணா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதன்யா எனும் 22வயது இளம்பெண், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். கரையான் அரித்த கூரை வீட்டில் படித்த ஸ்ரீதன்யா, யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று தனது பெற்றோர் சுரேஷ் மற்றும் கமலத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியைச் சேர்ந்த ஆதிவாசி பெண் ஒருவர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளதை அறிந்த ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ”கேரளாவின் முதல் ஆதிவாசி பெண் ஸ்ரீதன்யா சுரேஷ் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. ஸ்ரீதன்யாவின் விடாமுயற்சி அவரது கனவை நனவாக்கியுள்ளது. ஸ்ரீதன்யாவுக்கும் அவரது பெற்றோர்களுக்கும் என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவர் தேர்ந்தெடுத்துள்ள துறையில் வெற்றிப் பெற வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீதன்யாவிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளனர்.