ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர், அல்வார் நாடாளுமன்ற தொகுதி மற்றும் மண்டல்கர் உள்ளிட்ட தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அபார வெற்றிப் பெற்றுள்ளனர். இதனால், பாஜக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
ராஜஸ்தானில் அஜ்மீர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சன்வர்லால் ஜட், அல்வர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சந்த் நாத், மண்டல்கிரக் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீர்த்தி குமாரி ஆகியோரது மரணத்தை தொடர்ந்து மூன்று தொகுதிகளிலும் 29-ம் தேதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இடைத்தேர்தலையொட்டி பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. மண்டல்கிரக் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் வேட்பாளர் விவேக் பாகத் 12976 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். பாரதீய ஜனதா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. விவேக் பாகத் 70,146 வாக்குகளை பெற்று உள்ளார், பாரதீய ஜனதா வேட்பாளார் 57,170 வாக்குகளை பெற்று உள்ளார்.
இரு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றியை நாட்டியது. அல்வர் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. கரண் சிங் யாதவை நிறுத்தியது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் கரண் சிங் 1,15,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையை பெற்று உள்ளார். கரண் சிங் 4,30,218 வாக்குகளையும், பாரதீய ஜனதா வேட்பாளர் ஜாஸ்வந்த் யாதவ் 3,15,146 வாக்குகளையும் பெற்று உள்ளனர். நோட்டாவிற்கு 10511 வாக்குகள் கிடைத்து உள்ளது.
மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் அபார வெற்றியடைந்துள்ளதால், பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.