ஜூம்லானாமிக்ஸ் தவிர வேறொன்றுமில்லை - பட்ஜெட் குறித்து யெச்சூரி கருத்து

2018ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் தேர்தல் கால மோடியின் வாக்குறுதிகள் போல உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

Feb 2, 2018, 08:27 AM IST

2018ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் தேர்தல் கால மோடியின் வாக்குறுதிகள் போல உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

இது குறித்து கூறியுள்ள அவர், “2018 பட்ஜெட் ‘ஜூம்லானாமிக்ஸ்’ தவிர வேறொன்றுமில்லை. (ஜூம்லானாமிக்ஸ் என்பது, தேர்தல்கால மோடி வாக்குறுதிகள் ஆகும்) ஏனெனில், மக்களுக்கு ஏராளமான சலுகைகளை அளித்திருப்பதாக தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், உண்மையில் மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை.

பட்ஜெட் என்பது அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் இந்தப் பட்ஜெட்டில் பொருளாதார நடவடிக்கைகள் குறைந்திருப்பதையே பார்க்க முடிகிறது. அதன் காரணமாக நாட்டில் வேலையின்மை அதிகரிக்கும், மக்களின் துன்ப துயரங்கள் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

நேரடி வரியைக் குறைத்திருக்கிறார்கள். அதன் மூலம் பணக்காரர்களுக்கு சலுகைகள் அளித்திருக்கிறார்கள். அதே சமயத்தில் சாமானிய மக்களையும், நடுத்தர மக்களையும் கசக்கிப் பிழியக்கூடிய விதத்தில் மறைமுக வரியை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

சுகாதார இன்சூரன்ஸ் குறித்து பட்ஜெட் அளந்திருக்கிறது. இது ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே இருப்பதுதான். இதுபோன்ற சுகாதார இன்சூரன்ஸ், பயிர் இன்சூரன்ஸ் போன்றவற்றால் நடைமுறையில் அதனை நடத்தி வரும் கார்ப்பரேட் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்குத்தான் லாபமேயொழிய, அதனால் பயனாளர்களுக்குப் பெரிதாக ஒன்றும் இருக்கப்போவதில்லை. இதை நாம் அனுபவரீதியாகப் பார்த்து வருகிறோம்.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். கடந்த ஒரு வாரத்திற்குள் ஏழரை ரூபாய் உயர்த்திவிட்டு 2 ரூபாய் குறைத்திருப்பதன்மூலம் உண்மையில் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை.

உண்மையில் இந்த பட்ஜெட் விவசாயிகளின் நலன்கள் குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. குறைந்தபட்ச ஆதார விலையை குறுவைப் பருவத்திற்கு மட்டும் அறிவித்திருக்கிறார்கள். அதுவும் சில மாநிலங்களில் தேர்தல் வருவதையொட்டி இவ்வாறு அறிவித்திருக்கிறார்கள். அதன்பின் என்ன ஆகும் என்று தெரியவில்லை.

மொத்தத்தில் இந்த பட்ஜெட் மக்கள் விரோத பட்ஜெட், விவசாயிகள் விரோத பட்ஜெட். அதே சமயத்தில் சர்வதேச மூலதனம் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளுக்கு மேலும் சலுகைகள் அளித்துள்ள பட்ஜெட்டாகும்” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading ஜூம்லானாமிக்ஸ் தவிர வேறொன்றுமில்லை - பட்ஜெட் குறித்து யெச்சூரி கருத்து Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை