ஆன்லைன் வர்த்தகம் மூலமாக ஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோப்புக்கட்டி டெலிவரி செய்யப்பட்டதால் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுள் ஒன்றான ஃப்ளிப்கார்ட் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த ஒருவர் ஃப்ளிப்கார்ட் இணையதளம் மூலமாக 55 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐ-போன் ஒன்றை ஆர்டர் செய்தார். இதற்கான பணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தியிருந்தார். இதையடுத்து கடந்த வாரம் ஃப்ளிப்கார்ட் மூலமாக அவர் ஆர்டர் செய்திருந்த ஐ-போன் டெலிவரி செய்யப்பட்டது.
ஆனால். அதில் 55ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஐ-போனுக்கு பதிலாக 10 ரூபாய் சலவை சோப்புக்கட்டி இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் உடனடியாக மும்பை போலீஸிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஃப்ளிப்கார்ட் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் தவறு குறித்து முழு ஆராய்ச்சி செய்த பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நபருக்கு அவர் ஆர்டர் செய்த பொருள் முறையாக வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.