டெல்லியில், ஆம் ஆத்மி கட்சிக்கு 4 இடங்களை ஒதுக்க காங்கிரஸ் தயாராக உள்ளது என மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
அண்மையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டனர். அன்று முதலே ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையிலான பேச்சு வார்த்தை தொடங்கியது. டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி விரும்பியது. ஆனால், டெல்லியில் மட்டும் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்கக் காங்கிரஸ் முன்வந்தது.
இந்நிலையில், டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 2 தொகுதிகளைக் காங்கிரஸுக்கு ஒதுக்குவதாக ஆம் ஆத்மி தெரிவித்தது. இதனால், பேச்சுவார்த்தை பலமுறை தோல்வியில் முடிந்தது. இதன் பிறகு, மீண்டும் நடந்த பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லாமல் தொடர்ந்து இழுபறியாகவே நீடித்து வந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், ‘டெல்லியில் பஜாகவை படுதோல்வி அடையச் செய்ய ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையில் ஒரு கூட்டணி அமையும். ஆம் ஆத்மி கட்சிக்கு 4 இடங்களை ஒதுக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. ஆனால், கெஜ்ரிவால் எதுவும் சொல்லாமல் ‘யு டர்ன்’ போட்டு வருகிறார். எங்கள் கதவு இன்னும் திறந்துதான் உள்ளது ஆனால், நேரம் கடந்து கொண்டிருக்கிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.