பாலியல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சாமியார் குர்மீத்சிங்கின் சூட்கேஸை சுமந்து சென்ற ஹரியானா மாநில அரசு வழக்கறிஞர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
ஹரியானா மாநில அட்வகேட் ஜெனரல் பல்தேவ் ராஜ் மகாஜனின் பரிந்துரையின் அடிப்படையில் தண்டனைக் கைதிக்கு உதவியதாக வழக்கறிஞர் குர்தாஸ் சல்வாரா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பல்தேவ் ராஜ் மகாஜன் கூறுகையில், அரசு ஊழியர் ஒருவர் இது போன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது என்றார்.
பஞ்சகுலா சி.பி.ஐ. நீதிமன்றம் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத்தை குற்றவாளி என அறிவித்ததும், அவரை ஹெலிகாப்டரில் ஏற்றி ரோக்டக் சிறைக்கு கொண்டு வந்தனர். அப்போது, வழக்கறிஞர் குர்தாஸ் சல்வாரா, குர்மீத்தின் சூட்கேஸ்களை எடுத்துக் கொண்டு உடன் வந்தார். இந்த காட்சிகள் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு, சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, வழக்கறிஞர் குர்தாஸ் சல்வாரா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.