‘ராகுல்காந்தியால் இன்னும் 20 வருடங்களுக்கு பிரதமராக முடியாது’ என்று வருண்காந்தி கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல. மோடிக்காக மக்கள் வாக்குகளை மட்டுமல்ல, ரத்தத்தையே கொடுப்பார்களாம்!
சஞ்சய்காந்தி-மேனகா தம்பதியின் மகனும், ராகுல்காந்தியின் சகோதரனுமான வருண்காந்தி, உ.பி. மாநிலம் பிலிபித் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். அங்கு பிரச்சாரத்தில் இருந்த அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ‘‘காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராக வர வாய்ப்பு உள்ளதா?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல’’ என்று பதிலளித்தார். பின்னர் சுதாரித்து கொண்டு, ‘‘ராகுல்காந்தியால் இன்னும் 20 வருடங்களுக்கு பிரதமர் ஆகவே முடியாது. பிரதமர் மோடியைத் தவிர யாரையும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மோடிக்காக மக்கள் வாக்குகளை மட்டுமல்ல, தங்கள் ரத்தத்தையே கொடுப்பார்கள்’’ என்றார்.
‘‘உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி பிரச்சாரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ என்று கேட்டதற்கு, ‘‘என் அம்மா மட்டுமே எனது குடும்பம். அவரால்தான் நான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். நான் பிஜேபியை விட்டு விலகினால், அன்றுதான் அரசியலில் எனக்கு கடைசி நாளாக இருக்கும்’’ என்று வருண் பதிலளித்தார்.
இதற்கு முன்பெல்லாம் சோனியா, ராகுலைப் பற்றி வருண்காந்தி எதுவுமே பேசியதே இல்லை. இந்த தேர்தலில்தான் அவரும் இந்த அளவுக்கு மாறியிருக்கிறார்.
இதை கேட்டால், ‘‘பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானே மாறும் போது இவர் எல்லாம் எம்மாத்திரம்?’’ என்பது காங்கிரசாரின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கும்.