மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய 34வது லீக் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றியை பதிவு செய்தது.
ஐபிஎல் போட்டியின் 34வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.
மும்பை அணியில் க்ருணால் பாண்டியா அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரோகித் சர்மா 30 ரன்களிலும் குயிண்டன் டி காக் 35 ரன்களிலும் அவுட் ஆகினர். கடைசியாக களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 15 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார்.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா 25 ரன்களும் ஷிகர் தவான் 35 ரன்களும் எடுத்து நல்ல துவக்கத்தை தந்தனர். ஆனால், அதன் பின்னர் இறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்க எண்களுடன் அவுட்டாகி டெல்லி அணியை தோல்வியடையச் செய்தனர்.
20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து வெறும் 128 ரன்களுக்கு சுருண்டது. இதனால், 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றியை அடைந்தது.
மும்பை அணி பந்துவீச்சாளர்கள் ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி டெல்லி அணியை பலவீனம் அடையச் செய்தனர்.
ஹர்திக் பாண்ட்யா, லஸித் மலிங்கா மற்றும் க்ருணால் பாண்ட்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சிறப்பான பந்துவீச்சு மற்றும் அதிரடி பேட்டிங் செய்த ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன் விருதினை வென்றார்.