மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு கைதியான பெண் சாமியார் சாத்வி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி, குண்டுவெடிப்பில் உயிரிழந்தவரின் தந்தை வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.
கடந்த 2008ம் ஆண்டில் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் வரை காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கில், பா.ஜ.க.வைச் சேர்ந்த பெண் சாமியார் சாத்வி பிரக்யா தாக்கூர் கைது செய்யப்பட்டு 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே இருக்கிறார்.
தற்போது, மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதியில் அவரை பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக திக்விஜயசிங் போட்டியிடுகிறார். இந்நிலையில், சாத்வி, தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரி, என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாலேகான் குண்டுவெடிப்பில் உயிரிழந்த ஒருவரின் தந்தையான நிசார் சயீத் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். அதில் அவர், ‘‘மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்விக்கு ஜாமீன் அளித்ததை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று காரணம் கூறி, குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில்லை. குற்றவழக்கில் கைது செய்யப்பட்ட அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். மேலும், அவர் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையே, பத்திரிகையாளர்களை சந்தித்த சாத்வி, தான் சிறையில் மிகவும் துன்புறுத்தப்பட்டதாக கூறி, கண்ணீர் விட்டு அழுதார்.