இந்தியாவின் புகழ்பெற்ற விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால், விமான சேவையை தொடர முடியாமல் திணறி வருகிறது அந்நிறுவனம். கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையால் கடந்த புதன்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் பத்து போயிங் 777-300ERs ரக விமானங்களும், ஆறு ஏர்பஸ் A330s ரக விமானங்களும் என 16 பெரிய விமானங்கள் உள்ளன. முன்னதாக, நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் இன்று ஜெட் ஏர்வேஸ் சிஇஓ வினய் துபே டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ``ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க 4 பேர் ஆர்வமுடன் இருப்பதாக அருண்ஜெட்லி கூறினார். அதேபோல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விற்பதற்கான ஏலத்தை வெளிப்படையாக நடத்த வேண்டும் அவரிடம் கோரிக்கை வைத்தோம்" எனக் கூறினார். இவர் சந்திப்பதற்கு முன்னதாக ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களும் அருண் ஜெட்லியை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.