கொல்கத்தா முன்னாள் கமிஷனரை கைது செய்ய சிபிஐக்கு தடையில்லை! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சாரதா சிட்பண்ட்ஸ் முறைகேடு வழக்கில் தடயங்களை அழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய சி.பி.ஐ.க்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் சாரதா சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள், பொது மக்களிடம் கோடிக்கணக்கில் வசூலித்து மோசடி செய்துள்ளது. இந்த நிறுவனங்களில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவர்கள், அவரது கட்சி பிரமுகர்கள் பெருமளவு பணம் பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனாலும், ஆரம்பத்தில் சாரதா முறைகேடுகள் தொடர்பாக கொல்கத்தா போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரித்தனர். அதன்பின், அந்த வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டன.

அதைத் தொடர்ந்து, வழக்கு ஆவணங்களை தங்களிடம் தராமல், அப்போதைய கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார் இழுத்தடிப்பதாக சி.பி.ஐ. புகார் கூறியது. அதற்கு பிறகு, வழக்கில் முக்கிய தடயங்களை அழித்து விட்டதாக ராஜீவ்குமார் மீது குற்றம்சாட்டியது. ஆனாலும், சி.பி.ஐ. இந்த வழக்கில் வேகம் காட்டாமல் இருந்தது.

தேர்தல் அறிவித்த பின்பு, திடீரென சி.பி.ஐ.யின் இந்த வழக்கில் அதிரடியாக களம் இறங்கியது. கடந்த பிப்ரவரியில் கொல்கத்தாவுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் குழு சென்று போலீஸ் கமிஷனரிடம் விசாரணை நடத்த முயன்றது. மாநில அரசின் அனுமதி பெறாமல் அப்படி திடீரென சி.பி.ஐ. டீம் வந்திறங்கியது மத்திய பாஜக அரசின் திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை என்று மம்தா பானர்ஜி கொதித்தெழுந்தார். சி.பி.ஐ. அதிகாரிகளை அத்துமீறி நுழைந்ததாக கூறி, கொல்கத்தா போலீசார் பிடித்து சென்றனர். அதன்பின், அவர்களை வெறுங்கையுடன் திருப்பி அனுப்பினர்.

இதற்கு பின் உச்சநீதிமன்றத்திற்கு இந்த விவகாரம் சென்றது. அப்போது ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. டீம் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால், அவரை மம்தா ஆளும் கொல்கத்தாவிலும் இல்லாமல், மத்திய பா.ஜ.க. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லியிலும் இல்லாமல் மேகாலயாவின் ஷில்லாங்கில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, ராஜீவ்குமாரிடம் 5 நாள் விசாரணை நடத்தியது சி.பி.ஐ. டீம்!

இதற்கு பிறகு ராஜீவ்குமாரை கைது செய்து காவலில் வைத்து விசாரிக்க வேண்டியிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவி்த்தது. எனினும், ராஜீவ்குமாரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மே 17ம் தேதி விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு, சி.பி.ஐ. கோரிக்கையை விசாரி்த்தது. பின்னர், ராஜீவ்குமாரை கைது செய்ய விதித்திருந்த தடையை நீதிபதிகள் நீக்கினர். அதே சமயம், ராஜீவ்குமார் சட்டரீதியாக உரிய நீதிமன்றத்தில் முறையிட ஒரு வாரம் அவகாசம் அளித்தனர். அதாவது, அவர் முன்ஜாமீன் பெறுவதற்கு இந்த அவகாசம் தரப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் அமித்ஷா கூட்டத்தில் வன்முறை வெடித்தது, தேர்தல் பிரசாரத்தை ஒரு நாள் முன்கூட்டியே முடிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்தது போன்ற பதற்றமான சூழலில் இந்த சாரதா சிட்பண்ட்ஸ் வழக்கு விவகாரம் அங்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடைசி கட்ட தேர்தல் மே 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மம்தாவின் திரிணாமுல் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் 23ம் தேதி தேர்தல் முடிவுக்கு பின்பே யார் கை ஓங்கும் என்பது தெரியும்!

பாஜகவுக்கு ஒரு சட்டம்... எதிர்க்கட்சி வேறு ரூல் சா..? தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்