மக்களவைத் தேர்தலை இவ்வளவு நீண்ட கால இடைவெளியில் நடத்துவதற்கு பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார். குறுகிய கால இடைவெளியில் நடத்த வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கிய நிலையில், இறுதிக்கட்டமாக 59 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தல் நடவடிக்கைகள் சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்தது. பாதுகாப்பு காரணங்களைக் காட்டி ஒவ்வொரு கட்டத் தேர்தலுக்கும் இடையே சுமார் ஒரு வார கால இடைவெளி விட்டு நடத்தப்பட்டது. இவ்வாறு நீண்ட நாட்களுக்கு தேர்தலை நடத்துவதற்கு பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இன்று பீகார் மாநிலம் பாட்னாவில் வாக்களித்த பின்னர் நிதீஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மக்களவைத் தேர்தலை இது போல் நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது. ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும் இடையே அதிக நாட்கள் இடைவெளி தேவையில்லை. இந்தக் கோடைக்காலத்தில் வாக்காளர்கள் உட்பட அனைவருக்கும் இது, தொல்லை கொடுக்கக் கூடியது. தேர்தலை குறைந்த நாட்களில் நடத்தும் விவகாரம் பற்றி அனைத்துக்கட்சிகளுக்கும் கடிதம் எழுத உள்ளேன் என தெரிவித்தார்.