தேர்தல் ஆணையர்களுக்கு இடையேயான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இனிமேல் மூன்று ஆணையர்களின் கருத்துக்களும் பதிவு செய்யப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.
தலைமை தேர்தல் ஆணையத்தில் தற்போது தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இருக்கிறார். மற்ற 2 ஆணையர்களாக அசோக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் இருக்கின்றனர். தேர்தல் தொடர்பான முக்கிய விஷயங்களில் இவர்கள் மூன்று பேரும் கலந்து ஆலோசித்துதான் முடிவெடுக்க வேண்டும்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, பா.ஜ.க.வுக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. சுனில் அரோரா பஞ்சாப்பை சேர்ந்தவராக இருந்தாலும் ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். அதே போல், மோடி அரசிலும் முக்கியப் பதவிகளை வகித்தவர். அதனால், அவர் மோடிக்கு ஆதரவாக இருப்பதாக பேசப்பட்டது.
இந்நிலையில், ராணுவத்தைப் பற்றி பிரசாரத்தில் பேசக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தும் பிரதமர் மோடி அதை மீறி பேசினார். இதே போல், பல விதிமீறல்களில் அவர் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் வரிசையாக புகார்களை கொடுத்தன. ஆரம்பத்தில் அவற்றை பரிசீலிக்காத தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பின், மோடி, அமித்ஷா மீதான புகார்களை விசாரித்தது. ஆனால், அவற்றில் விதிமீறல் இல்லை என்று நிராகரித்தது.
இந்த சூழலில், பிரதமர் மோடி, அமித்ஷா மீதான புகார்களில் தனது அதிருப்தி கருத்துக்களை சுனில் அரோரா பதிவு செய்யவில்லை என்றும், அதனால் இனிமேல் அவருடன் நடத்தை விதிகள் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்றும் லவாசா கூறினார். இதை அவர் 3 கடிதங்களில் அரோராவுக்கு தெரிவித்திருந்தார். இந்த தகவல் வெளியே கசியவும், எதிர்க்கட்சிகள் அதை பிடித்து கொண்டன.
அதன்பின், சுனில் அரோரா இது போன்ற கருத்து வேறுபாடுகள் வருவது தேர்தல் ஆணையத்தில் சகஜம் என்று விளக்கம் கொடுத்தார். இந்நிலையில், இன்று (மே 21) தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் லவாசாவும் பங்கேற்றார். அப்போது, இனிமேல் மூன்று ஆணையர்களி்ன் கருத்துக்களையும் அப்படியே பதிவு செய்வது என்றும், மெஜாரிட்டி கருத்தின் அடிப்படையில் தீர்மானித்து அதை வெளியுலகிற்கு அறிவிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதனால், தேர்தல் ஆணையர்களிடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்துள்ளது.