ஏராளமான கிரிமினல் பின்னணி... ஆனா தலையில தூக்கி கொண்டாடுறோம்... சாரங்கியின் உண்மை முகம் இதுதான்

Union minister Pratap sarangis another face of criminal background: analysis:

by Nagaraj, Jun 1, 2019, 09:33 AM IST

பிரதாப் சந்திர சாரங்கி.. 64 வயது பிரம்மச்சாரியான இவரை இன்று நாடே தலையில் தூக்கி வைத்து ஆஹா... ஓஹோ..வென கொண்டாடி வருகிறது. ஒரே ஒரு குடிசை வீடு.. ஒரே ஒரு சைக்கிளுக்கு மட்டுமே சொந்தக்காரர் .

பரம ஏழை , கல்யாணமே செய்து கொள்ளாமல் பொது வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டவர் என்றெல்லாம் புகழப்படும் இந்த சாரங்கி இப்போது மத்திய அமைச்சராகி விட்டதால் தான் இவ்வாறெல்லாம் புகழப்படுகிறார். ஆனால் இவருடைய கிரிமினல் பின்னணி பற்றி ஆராய்ந்தால் பல திடுக் தகவல்கள் வெளியாகி பகீர் கிளப்புகிறது.

இந்தத் தேர்தலில் ஒடிசாவின் பாலசோர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டுயிட்டு வெற்றி பெற்றவுடன் சாரங்கியைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஏழ்மை மற்றும் எளிமைக்கு சொந்தக்காரர் சாரங்கி.

தேர்தலிலும் எளிமையாக சைக்கிளிலேயே பிரச்சாரம் செய்து, எதிர்த்துப் போட்டியிட்ட ஆளும் பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கோடீஸ்வர வேட்பாளர்களை தோற்கடித்து எம்.பி.யானார். இப்போது பிரதமர் மோடி அமைச்சரவையிலும் இடம் பிடித்து விட்டார் என்று கூறி புகழோ புகழ் என்று சாரங்கியின் புகழ் பாடப்பட்டு வருகிறது.

ஆனால் சாரங்கியின் மறுபக்கத்தை புரட்டினால், அடிதடி, வன்முறை, தீ வைப்பு, மத மோதல் என ஏராளமான கிரிமினல் குற்றங்களுக்கு சொந்தக்காரர் என்ற பகீர் தகவல்கள் வெளியாகின்றன. ஒடிசாவில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பாலசோர் மாவட்டத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட சாரங்கி,பட்டப் படிப்பு படித்தவுடன் சந்நியாசியாகவும் விரும்பினார்.ராமகிருஷ்ண மடம் சென்று தனது சந்நியாசி விருப்பத்தை தெரிவிக்க, ஏதோ காரணம் சொல்லி மறுத்து விட்டதாம் மடம்.

இதன் பின் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்து தீவிர பிரச்சாரகராக உருவெடுத்து, அதன் கிளையான பஜ்ரங்தள் அமைப்பின் மாநிலத் தலைவராக உயர்ந்துள்ளார். அப்போதுதான் தீவிர இந்துத்வாவை கையில் எடுத்து வன்முறையாட்டம் ஆடியுள்ளார் சாரங்கி.

2002-ம் ஆண்டில் ராமர் கோயில் பிரச்னையில், சர்ச்சைக்குரிய நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி ஒடிசாவில் இந்து அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. சாரங்கி முன் நின்று நடத்திய போராட்டத்தில் ஒடிசா சட்டசபை கட்டடத்தை அடித்து சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.

ஒடிசாவில் கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு எதிராக பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்தவர்.1999-ல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்ஸ் என்பவர் அவருடைய இரு மகன்களுடன் ஒடிசாவில் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மதப் பிரச்சாரம் செய்து, பழங்குடி மக்களை மத மாற்றம் செய்ய முயன்றார் என்று கூறி ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது 11 வயது மற்றும் 7 வயது இரு மகன்களும் பிரச்சார வாகனத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் போதே தீ வைத்து எரித்துக் கொன்றது ஒரு கும்பல் .உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி, பெரும் கண்டனத்துக்கு ஆளான இச்சம்பவத்திலும் சாரங்கியின் மீது சந்தேகப்பார்வை விழுந்து, விசாரிக்கப்பட்டார் என்பதும் ஆனால் பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பதும் உண்மை.

பஜ்ரங்தள் அமைப்பின் தலைவர், இரு முறை ஒடிசா சட்டப்பேரவையில் எம்எல்ஏ, கடந்த 2014 எம்.பி தேர்தலில் நின்று தோற்றவர் என்று பிரபலமான சாரங்கி, இப்போது எம்.பி.யாகி மத்திய அமைச்சராகி விட்டார். ஒடிசாவின் மோடி என்று செல்லமாக அழைக்கப்படும் சாரங்கி மீது கலவரம், சூறையாடல், மத மோதல், தீ வைப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக 7 கிரிமினல் வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் சாரங்கி மத்திய அமைச்சரானவுடன், அவருடைய பழைய கதையெல்லாம் பின்தள்ளப்பட்டு ஆகா ஓகோவென நாடு முழுவதும் புகழப்பட்டு வருகிறார் என்பது தான் ஆச்சர்யமான ஒன்று.

You'r reading ஏராளமான கிரிமினல் பின்னணி... ஆனா தலையில தூக்கி கொண்டாடுறோம்... சாரங்கியின் உண்மை முகம் இதுதான் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை