84 விமான நிலையங்களில் முழு உடல் ஸ்கேனர் கருவி

Body scanners made mandatory at 84 airports

by எஸ். எம். கணபதி, Jun 2, 2019, 11:29 AM IST

நாடு முழுவதும் 84 விமான நிலையங்களில் முழு உடல் ஸ்கேனர் கருவி நிறுவுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பயணிகள் பரிசோதனையின்போது, பர்ஸ், பெல்ட், செல்போன் என்று எல்லாவற்றையும் எடுத்து விட்டு, மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.


விமான நிலையங்களில் பயணிகளை பரிசோதிக்கும் போது, அவர்கள் அணிந்திருக்கும் பெல்ட், வாட்ச் மற்றும் பர்ஸ், கர்சீப் வரை எல்லாவற்றையும் எடுத்து தனி டிரேயில் வைத்து விட்டு மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்வார்கள். அந்த பொருட்கள் மட்டுமே தற்போது ஸ்கேனரில் அனுப்பி சோதிக்கப்படுகிறது. பயணிகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதிக்கும் போது, ஒரு ஆளுக்கே 2, 3 நிமிடங்கள் வரை ஆகி விடும்.
தற்போது இந்த நேரத்தைக் குறைக்கும் வகையிலும், இன்னும் துல்லியமாக பரிசோதிக்கும் வகையிலும் முழு உடல் ஸ்கேனர் கருவியை நிறுவுவதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் பரிந்துரையின்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதல் கட்டமாக, நாடு முழுவதும் 84 விமான நிலையங்களில் இந்த ஸ்கேனர் கருவி வைக்கப்பட உள்ளது.
இது பற்றி, விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மெட்டல் டிடெக்டர்கள், சில மெட்டல் அல்லாத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கண்டுபிடிக்காது. ஆனால், முழு உடல் ஸ்கேனர் கருவி, பயணியின் உடலில் பொருத்தியுள்ள எல்லாவற்றையும் கண்டுபிடித்து விடும். ஸ்கேனரில் முழு உடல் நிர்வாணமாக தெரியும் போது பயணிகள் கூச்சப்படுவார்கள் அல்லவா? அதனால், அப்படி தெரியாமல் முழு உடல் ஸ்கெட்ச் மட்டுமே தெரியும் வகையில் ஸ்கேனர் அமையும். இதன் மூலம் எட்டு வினாடியில் ஒரு பயணியை சோதித்து விடலாம். அதனால் ஒரு மணி நேரத்தில் 300 பயணிகளை பரிசோதனை செய்து விடலாம். முதலில் 84 விமான நிலையங்களில் இந்த ஸ்கேனர் வைக்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் மற்ற விமானநிலையங்களிலும் வைக்கப்படும்’’ என்றார் .

You'r reading 84 விமான நிலையங்களில் முழு உடல் ஸ்கேனர் கருவி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை