கர்நாடக மாநிலம் தொட்பலாப்பூர் என்ற ஊரில் தங்கியிருந்த ஹபீப் உர் ரஹ்மான் என்ற நபரை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இரவு முழுவதும் அவரிடம் நடத்திய விசாரணையில் ராம் நகர் மாவட்டத்தில் உள்ள திப்பு நகர் என்ற இடத்தில் இரண்டு வெடிகுண்டுகளை பாலித்தீன் பைகளில் சுற்றி அதை கழிவுநீர் கால்வாயில் பதுக்கி வைத்திருப்பதாக ஹபீப் உர் ரஹ்மான் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து இன்று காலையில் இருந்து சம்பவ இடத்தில் தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ராம்நகர் காவல் துறை அதிகாரிகளும் தீயணைப்புத்துறை வீரர்களும், வெடிகுண்டு நிபுணர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த இடத்தில் இருந்து இரண்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை பத்திரமாக சம்பவ இடத்திலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் பெரும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.