திருப்பதி ஏழுமலையாான் கோயிலில் அனைத்து வகையான வி.ஐ.பி. தரிசனங்களை ரத்து செய்து விட்டு, புதிய முறை கொண்டு வரப்படும் என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் உலக பிரசித்தி பெற்றது. ஏழுமலையானை தரிசிக்க சாதாரண நாட்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வருகிறார்கள். பண்டிகை மற்றும் உற்சவ விழாக்களின் போது நான்கைந்து லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். அப்போது சுவாமி தரிசனத்திற்கு 2 நாட்கள் வரை கூட கூண்டுக்குள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
மேலும், வி.ஐ.பி. தரிசனங்களால் பக்தர்களின் வரிசை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகக் கூறி, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது திருமலா திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மனாக அம்மாநில புதிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் ஒய்.வி.சுப்பா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கிறிஸ்தவர் என்று சர்ச்சைகள் எழுந்தன. அதற்்கு அவர், தான் ஒரு தீவிரமான இந்து, சபரிமலைக்கு விரதம் இருப்பவர் என்று விளக்கம் கொடுத்தார். இதன்பின், சர்ச்சைகள் அடங்கின.
இந்நிலையில், ஒய்.வி.சுப்பா ரெட்டி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘திருமலை கோயிலில் வி.ஐ.பி. தரிசனங்கள் தொடர்பாக பொது நல வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இது பக்தர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. அதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டுமென்று நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிர்வாக அதிகாரியிடம் கூறியுள்ளேன். இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து வகையான வி.ஐ.பி. தரிசனங்களும் ரத்து செய்யப்படும். அதன்பின்பு, பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் வி.ஐ.பி. தரிசனங்களை மேற்கொள்ளும் வகையில் புதிய முறை ெகாண்டு வரப்படும்’’ என்றார்.
திருமலையில் தற்போது மூன்று வகையான வி.ஐ.பி. தரிசனங்கள் உள்ளது. முதலாவது வி.வி.ஐ.பி. தரசனம். இதில், ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், முதலமைச்சர்கள் போன்றவர்கள் இடம் பெறுகிறார்கள். 2வதாக மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள், ஆந்திர எம்.எல்.ஏக்கள், சினிமா பிரபலங்கள் உள்பட இதர துறையினர், திருமலா கோயில் ஊழியர்கள் இடம் பெறுகிறார்கள். 3வதாக, எம்.பி.க்கள், மாநில அரசுகள் மற்றும் வி.ஐ.பி.க்களின் கடிதம் கொண்டு வருபவர்கள் இடம் பெறுகிறார்கள்.
இந்த மூன்று தரிசன முறைகளும் ரத்து செய்யப்பட்டு புதிய வி.ஐ.பி. தரிசன முறை கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம், கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அன்றே தரிசனம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று கோயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.