காஷ்மீரின் கார்கில் பகுதியில் வாலாட்டிய பாகிஸ்தானை, 1999 ஜூலை 26 இதே நாளில் வாகை சூடியது இந்தியா.கார்கில் போர் வெற்றியின் 20-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, இந்திய படைகளின் வீரம், துணிச்சலுக்கு தலை வணங்குவோம் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார். இதே போல் பிரதமர் மோடியும், போர் நடைபெற்ற போது இந்திய வீரர்களை சந்தித்து உரையாடிய பழைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியை, கடந்த 1999-ம் ஆண்டு மே 3-ம் தேதி பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமிக்க முயன்று ஊடுருவினர். இதனை முறியடிக்க இந்தியப் படைகளும் குவிக்கப்பட்டது. இதனால் 1971-க்குப் பிறகு இரு நாடுகளிடையே மீண்டும் ஒரு போர் மூண்டது. கார்கில் யுத்தம் என்றழைக்கப்பட்ட இந்தப் போர் இமயமலையின் 32 ஆயிரம் உயரம் உள்ள பகுதியில் மிக உக்கிரமாக நடந்தது.
பதுங்கு குழிகள் அமைத்து, மலை முகடுகளில்,மறைந்து கண்ணுக்குத் தெரியாத இடங்களில் இருந்து பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலை இந்திய வீரர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டனர். சவாலான இந்தப் போரில் இந்திய பீரங்கிப் படைகளும், போர் விமானங்களும் முக்கியப் பங்கு வகித்தன. 84 நாட்கள் நீடித்த இந்தப் போரில் ஜூலை 26 1999-ல் இந்தியா வெற்றிக் கொடி நாட்டியது. எல்லையில் வாலாட்டிய பாகிஸ்தான் படையினர் சின்னாபின்னமாகினர்.பாகிஸ்தான் தரப்பில் 3000 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தியத் தரப்பில் 500 வீரர்கள் வீர மரணம் எய்தி, இந்தியாவின் போர் வலிமையை உலகுக்கு உணர்த்திய தினம் தான் இன்று.
இந்தப் போரில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டு தோறும் ஜூலை 26-ம் தேதிய கார்கில் போர் வெற்றி தினமாக கடைப்பிடித்து வருகிறோம். கார்கில் வெற்றியின் 20-ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியாவை பாதுகாத்தவர்களின் துணிச்சலுக்கும் வீரத்துக்கும் தலை வணங்குவோம்.1999 கார்கில் போரில் படைகள் தீரத்துடன் போரிட்டு வென்றன என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பிரதமர் மோடியும், கார்கில் போரின் போது, ராணுவ வீரர்களை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டு தமது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது, கார்கில் சென்று நமது துணிச்சல் மிக்க வீரர்களை சந்தித்து நமது ஒற்றுமையைக் காட்ட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தச் சமயத்தில், நான் ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் கட்சிப்பணியில் ஈடுபட்டு இருந்தேன். கார்கில் சென்றதும், நமது வீரர்களுடன் கலந்துரையாடியதும் மறக்க முடியாதவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கார்கில் வெற்றியின் 20-வது தினத்தை முன்னிட்டு, ராணுவ அமைச்சகம் சார்பில் கார்கில் போர் தொடர்பான வீடியோ ஒன்றையும் தயாரித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
'மொபைல் போனில் மும்முரம்'..! ஜனாதிபதி உரையை கண்டு கொள்ளாத ராகுல்காந்தி