ஜம்மு காஷ்மீரில் ராணுவம் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. மாநிலத்தை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவியுள்ள நிலையில், அங்கு பெரும் எதிர்ப்புகள் வலுத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையை இம்முறை காஷ்மீரில் நிகழ்த்த உள்ளதாகவும், அப்போது முக்கிய அறிவிப்புகள் பலவற்றை வெளியிடவும் அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனாலேயே ஜம்மு காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுதந்திரம் பெற்றது முதலே ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு என சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் எந்த மாநிலத்திற்கும் இல்லாத சிறப்பு அந்தஸ்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின், 35 A மற்றும், 370 பிரிவுகள், இதற்கான சலுகையை அளிக்கிறது. இதன்படி, அந்த மாநிலத்தில் பிறர், சொத்துகள் வாங்கவோ, வேலை பார்க்கவோ முடியாது. இதை ரத்து செய்து, நாடு முழுமைக்கும், ஒரே சீரான சட்டத்தை பின்பற்ற வேண்டும் என, சங் பரிவார் அமைப்புகள், மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படலாம் என்பது போன்று பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதனாலேயே கடந்த சில நாட்களாக காஷ்மீரில் ஆயிரக்கணக்கான படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் றெக்கை கட்டி பறந்தன.இந்நிலையில் தரை, வான் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதோடுஅமர்நாத் யாத்திரையும் நேற்று திடீரென நிறுத்தப்பட்டதால் காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க திட்டம் எனவும் இதற்கான அறிவிப்பை சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவிக்க உள்ளதாகவும் நேற்று இரவு முதல் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனால் நேற்று இரவு முதல், மாநிலம் முழுவதும் மக்கள் பதற்றத்துடன் காணப்படுகின்றனர். ஏ.டி.எம்., மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப, பெட்ரோல் பங்க்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். எந்த நேரமும், மாநிலம் முழுதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப் படுவதால் இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு பதற்றம் நிலவுகிறது.
சுதந்திர தின உரையை, பிரதமர்கள், டில்லி செங்கோட்டையில் தான் ஆற்றுவது வழக்கம். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக காஷ்மீரில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது காஷ்மீரை 3 ஆக பிரிப்பது, சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது போன்ற அறிவிப்புகளையும் வெளியிடுவார் என்றும் யூகங்கள் வெளியாகி வருகிறது. அதற்காகத் தான், கூடுதல் படை வீரர்கள், அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் எனவும் கூறப்படும் ஜம்மு காஷ்மீரில் உச்ச கட்ட பரபரப்பும், பதற்றமுமாக காணப்படுகிறது.
நிலைமை இவ்வாறு இருக்க, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு - காஷ்மீருக்கு துணை ராணுவ வீரர்கள் அனுப்பப்படுவது, வழக்கமான ஒன்று தான்.வீரர்களின் தேவை, அவர்களின் பணியிட மாற்றம், ஓய்வு போன்ற பல காரணங்களுக்காக, வீரர்கள் மாற்றம் அவ்வப்போது நிகழ்கிறது
இதை, இதற்கு முன், வெளிப்படையாக விவாதித்ததில்லை. அதுபோலத் தான் இதுவும் என தெரிவித்துள்ளது. எனினும், ஜம்மு - காஷ்மீரில், நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது.