முதலமைச்சரின் மனைவியிடம் ரூ.23 லட்சம் ஆன்லைன் மோசடி

by எஸ். எம். கணபதி, Aug 8, 2019, 12:07 PM IST
Share Tweet Whatsapp

ஒரு முதலமைச்சரின் மனைவியிடமே வங்கி மேலாளர் போல் போனில் பேசி, ரூ.23 லட்சத்தை ஆன்லைனில் சுருட்டிய ஜார்கண்ட் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் மனைவியும், பாட்டியாலா எம்.பி.யுமான பிரநீத் கவுரிடம் கடந்்த மாதம் 29ம் தேதி ஒருவர் போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்தார். போனில் தொடர்பு ெகாண்ட மர்ம நபர், தன்னை ஸ்டேட் பேங்க் மேலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.


பின்னர், பிரநீத் கவுருக்கு நாடாளுமன்றச் செயலகத்தில் இருந்து சம்பள அரியர்ஸ் அனுப்ப வேண்டியுள்ளதாக கூறி, வங்கி கணக்கு எண் மற்றும் இதர விவரங்களை கேட்டிருக்கிறார். பிரநீத் கவுரும் எதைப் பற்றியும் யோசிக்காமல் தனது வங்கி கணக்கு எண், எந்த கிளை, ஐ.எப்.எஸ்.சி கோடு எண் என்று எல்லாவற்றையும் உளறிக் கொட்டி விட்டார். அது மட்டுமல்ல. அந்த மர்ம நபர், ‘உங்கள் போனுக்கு ஒரு ஓ.டி.பி. நம்பர் வந்திருக்கும், அதை சொல்லுங்க’ என்று கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார்.


அது என்னவென்றால், பிரநீத் கவுர் கணக்கில் ரூ.23 லட்சம் இருப்பதை கண்டுபிடித்து அதை தங்கள் கணக்கிற்கு ஆன்லைனில் மாற்றிக் கொள்ளுவதற்கான ஓ.டி.பி. நம்பர்தான். விவரம் தெரியாமல் பிரநீத் செய்த தவறால், ரூ.23 லட்சம் ஒரு நொடியில் சுருட்டப்பட்டு விட்டது. அதன்பிறகு, வங்கியில் இருந்து மெசேஜ் வரவே பிரநீத் அலறியடித்து கொண்டு பஞ்சாப் காவல் துறையை தொடர்பு கொண்டார். பாட்டியாலா போலீசார் உடனடியாக அந்த மர்மநபரின் போன் எண்ணை வைத்து அது எங்கிருந்து செயல்பட்டது என்று ஆராய்ந்தனர்.


இது பற்றி, பாட்டியாலா சீனியர் எஸ்.பி. மன்தீ்ப்சிங் சித்து கூறுகையில், ‘‘போனில் தொடர்பு கொண்டவர் ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கிறார் என்பதையும், அங்கிருந்துதான் ஆன்லைன் மோசடி கும்பல் இயங்குகிறது என்பதையும் கண்டுபிடித்து விட்டோம். இது தொடர்பாக, ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுத்ததில், அட்டவுல் அன்சாரி என்பவரை கைது செய்திருக்கிறார்கள். ஜம்தாரா என்ற ஊரில் இருந்து இந்த ஆன்லைன் மோசடிக் கும்பல் செயல்படுகிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறோம். விரைவில் அவர்களையும் பிடித்து பஞ்சாப் கொண்டு சென்று விசாரிப்போம்’’ என்றார்.

முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா ஸ்வராஜ் உடல் தகனம


Leave a reply