அடுத்த 5 ஆண்டுகளில் நம் பாக்கெட்டுகளில் உள்ள பிளாஸ்டிக்கால் ஆன ஏடிஎம் கார்டுகளை முற்றிலும் காலி செய்ய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா திட்டமிட்டுள்ளது. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க யோனோ கேஸ் என்னும் புதிய திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இன்றைக்கு நாட்டில் வங்கிக் கணக்கு இல்லாதோர் எண்ணிக்கை அரிதாகி விட்டது. நம் நாட்டின் மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் (சுமார் 90 கோடி) ஏடிஎம் கார்டு வைத்துள்ளதாக புள்ளி விபரம் கூறுகிறது. இதனால் நகரங்கள் மட்டுமின்றி, சிறு கிராமங்களிலும் புற்றீசல் போல் ஏடிஎம் மையங்கள் முளைத்து விட்டன. ஏடிஎம் மையங்களால் வங்கிகளுக்கு ஆகும் செலவை குறைக்கவும், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், ஏடிஎம் கார்டுகளை படிப்படியாக குறைக்கவும் வங்கிகள் திட்டமிட்டுள்ளன.
முதற்கட்டமாக நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ), ஏடிஎம் கார்டுகளை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது. அனைத்து டெபிட் கார்டுகளையும் (ஏடிஎம் கார்டு) நீக்கி விட்டு யோனோ கேஷ் என்ற புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்த யோனோ கேஷ் என்ற அப்ளிகேஷனை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும்.
பணம் எடுக்க வேண்டும் என்றால் யோனோ அப்ளிகேசன் மூலம் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு பாஸ்வேர்டு அனுப்பி வைக்கப்படும். பின்னர் ஏடிஎம்களில் யோனோ கேஷ் எண் மற்றும் பாஸ்வேர்ட் எண்ணை பதிவு செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த வசதியை நாடு முழுவதிலும் உள்ள 16,500 ஏடிஎம்களில் தற்போது பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக ஏடிஎம் கார்டுகளை ரத்து செய்து விட்டு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதி கொண்டு வரப்படும் எனவும் எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜ்னீஸ் குமார் தெரிவித்துள்ளார்.