எமர்ஜென்சியின் போது 19 மாதம் சிறைவாசம் அனுபவித்த அருண் ஜெட்லி

19 months jail in emergency period, Life history of Arun Jaitley

by Nagaraj, Aug 24, 2019, 14:39 PM IST

1952-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி டெல்லியில் பிறந்த அருண் ஜெட்லி செயின்ட் சேவியர் பள்ளியில் படிப்பை முடித்து, பொருளாதாரத்தில் பட்டம் முடித்தார். அதன் பின் சட்டப் படிப்பையும் முடித்தார். இளம் வயதிலேயே ஜன சங்கத்தில் உறுப்பினராகி, அதன் கிளை அமைப்பான யுவமோர்ச்சாவில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் ஜெட்லி.

1975-ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்தபோது ஜெயப்பிரகாஷ் நாராயணன், வாஜ்பாய் போன்ற முக்கியத் தலைவர்கள் பலர் அதனை எதிர்த்தனர். அவர்களுடன் சேர்ந்து ஜெட்லியும் எமர்ஜென்சிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று 19 மாதம் சிறையில் இருந்தவர் ஜெட்லி.அப்போது அவருக்கு வயது 24 மட்டுமே.

அதன் பின் 1980-ல் பாஜக தோன்றிய போது உறுப்பினராக ஆன ஜெட்லி, வழக்கறிஞர் தொழிலில் கொடி கட்டிப் பறந்தார்.டெல்லி2யர் நீதிமன்றம், உச்ச நீதி மன்றத்தில் தமது வாதத்திறமையால் புகழ் பெற்றார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது எழுந்த போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பான வழக்கில் ராஜீவுக்கு எதிராக ஜெட்லியின் வாதத்திறமை முக்கியமானது.

இதன் பின் 1999 -ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த போது, பல்வேறு துறைகளின் இணையமைச்சராக பொறுப்பு வகித்தார். பாஜக மட்டுமின்றி அனைத்து தரப்பினருடனும் அன்பாக பழகக் கூடியவர் என்ற நற்பெயர் பெற்ற ஜெட்லி, பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

2009 பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்ட போது கட்சித் தலைமை மாற்றம் கொண்டு வர வேண்டும் என குரல் கொடுத்த ஜெட்லி,2014-ல் மோடியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த காரணகர்த்தாவாகத் திகழ்ந்தவர்களில் ஜெட்லி முக்கியமானவர்.

இதனாலேயே மோடி அமைச்சரவையில் நிதி, பாதுகாப்பு என முக்கிய இலாகாக்களை வகித்தார். நிதியமைச்சர் பொறுப்பில் இருந்த ஜெட்லி நிதித்துறையில் பல்வேறு அதிரடி சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அறிவித்த போது, அதற்கு எழுந்த எதிர்ப்புகளை லாவகமாக சமாளித்தவர் ஜெட்லி தான் . ஜிஎஸ்டி வரி முறை கொண்டு வர காரணமானவரும் ஜெட்லி தான் .கடந்த மோடி ஆட்சிக் காலத்தில் 4 பட்ஜெட்களை தொடர்ந்து சமர்ப்பித்த ஜெட்லி, கடந்த டிசம்பரில் உடல் நிலை பாதிப்பு காரணமாக நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார். இதனால் தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டை ரயில்வே அமைச்சராக இருந்த பியூஸ் கோயல் சமர்ப்பித்தார்.

மேலும் உடல் நிலையை காரணம் காட்டி தேர்தலில் போட்டியில்லை என்றும் அறிவித்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற ஜெட்லியின் மறைவு பாஜகவுக்கு பேரிழப்பு தான் என்று கூற வேண்டும். அது மட்டுமின்றி நல்ல நிர்வாகத் திறன் படைத்த, அனைத்துக் கட்சியினருடனும் எளிதில், எளிமையாக பழகக் கூடியவரை நாடு இழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஜெட்லியின் மறைவுக்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர் களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

66 வயதில் மறைந்த அருண் ஜெட்லிக்கு, மனைவி சங்கீதா டோக்ரா, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

You'r reading எமர்ஜென்சியின் போது 19 மாதம் சிறைவாசம் அனுபவித்த அருண் ஜெட்லி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை