குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, ஒரு மாதத்திற்கு முன்பே, இந்தியாவிலிருந்து தப்பிவிட்டதாக கூறப்படுவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பைக் கிளையில் மொத்தம் ரூ. 11 ஆயிரத்து 360 கோடிகள் அளவில் மோசடியாகவும், அதிகாரமற்ற முறையிலும் மோசடி நடந்து உள்ளது என வங்கியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாயை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நீரவ் மோடி ரூ. 11 ஆயிரத்து 360 கோடி அளவிற்கு மோசடி செய்துவிட்டதாக மத்திய புலனாய்வுக் கழகத்திடம் (சிபிஐ), புதனன்று அவசர அவசரமாக இரண்டு புகார்களை பஞ்சாப் நேசனல் வங்கி அளிக்கிறது.
அதைத் தொடர்ந்துதான், நேற்று வியாழக்கிழமையன்று அமலாக்கத் துறையினர் நீரவ் மோடியின் குர்லா பகுதியில் அமைந்த இல்லம், காலாகோடா பகுதியில் அமைந்த அவரது நகை கடை, பந்திரா மற்றும் லோயர்பேரல் பகுதிகளில் அமைந்த 3 நிறுவனங்கள், குஜராத்தில் சூரத் நகரில் 3 இடங்கள் மற்றும் தில்லியில் சாணக்யபுரி மற்றும் டிபென்ஸ்காலனி பகுதிகளில் அமைந்த ஷோரூம்கள் என 10 இடங்களில் சோதனை நடத்தினர்.
மும்பையில் உள்ள நீரவ் மோடியை வீட்டுக்கு சீலும் வைத்தனர். நீரவ் மோடியை கைது செய்யும் முயற்சியிலும் இறங்கினர். அப்போதுதான், நீரவ் மோடி தற்போது இந்தியாவிலேயே இல்லை. அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாகவே சுவிட்சர்லாந்து நாட்டிற்கு தப்பியோடிவிட்ட தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், அவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு, பிரதமருடன் டாவோஸ் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றது எவ்வாறு? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக மத்திய அரசு விளக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், பிரதமர் மோடியுடன் நீரவ் மோடி இணைந்து எடுத்த புகைப்படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, ''யார் இந்த நீரவ் மோடி? ஊழலின் புதிய அவதாரமா? அரசின் பிடியில் இருந்து எவ்வாறு வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வது என்பது குறித்து லலித் மோடி, விஜய் மல்லையா ஆகியோரிடம் இருந்து ரகசியமாக பாடம் கற்றுக் கொண்டாரா?
மக்கள் பணத்தைக் கோடிக்கணக்கில் சுரண்டி விட்டு நாட்டை விட்டு தப்பியோட விதிகள் எதையும் வகுத்து வைத்துள்ளனரா? இதற்கு எல்லாம் யார் காரணம்? யார் பொறுப்பு? டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடியுடன் நீரவ் மோடி கலந்து கொண்டார்' என்று குறிப்பிட்டுள்ளார்.