‘‘சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டுகளை மீடியாவில் வெளியிடுகின்றனர். ஆனால், அவரிடம் சி.பி.ஐ விசாரிக்கும் போது, ‘ட்விட்டர் கணக்கு வைத்திருக்கிறீர்களா?’ என்பது போன்ற கேள்விகளைத்தான் கேட்டிருக்கிறார்கள்’’ என்று கபில்சிபல் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் சிதம்பரம் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடியானது. இந்நிலையில், பணபரிமாற்ற மோசடி வழக்கில் தன்னை அமலாக்கத் துறையினர் கைது செய்யக் கூடும் என்று கூறி, சிதம்பரம் சார்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வாதாடினார். சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகளை, அமலாக்கத் துறையினர் வேண்டுமென்றே மீடியாக்களில் வெளியிடுகின்றனர். அவரது பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் அமலாக்கத் துறையினர் இந்த குற்றச்சாட்டுகளை வெளியிடுகின்றனர் என்று நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால், இதை அமலாக்கத் துறையினர் மறுத்தனர். ‘‘நாங்கள் எந்த அபிடவிட்டையும் வெளியிடவில்லை. நாங்கள் சிதம்பரத்தின் தரப்புக்கு மட்டுமே அபிடவிட்டுகளை அளித்தோம். அவர்கள்தரப்பு வழக்கறிஞர்கள்தான் டி.வி.களில் அவை குறித்து பேசி வருகிறார்கள்’’
என்று அமலாக்கத் துறை சார்பில் வாதாடப்பட்டது.
வழக்கறிஞர் கபில்சிபல் வாதாடுகையில், ‘‘சி.பி.ஐ. கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் எந்த விசாரணையும் நடக்கவில்லை. மாறாக, சிதம்பரத்திடம் சி.பி.ஐ. அதிகாரிகள், ‘ட்விட்டரில் கணக்கு வைத்திருக்கிறீர்களா?’ என்பது போன்ற சாதாரணமான கேள்விகளைத்தான் கேட்டிருக்கிறார்கள். சிதம்பரத்தை காவலில் வைத்திருப்பதே தேவையற்றது’’ என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையே, அமலாக்கத் துறையினரின் அபிடவிட் கசிந்ததில், சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டுகள் வெளியே வந்துள்ளன. அவருக்கு வெளிநாட்டு வங்கிகளில் 17 பினாமி கணக்குகள் உள்ளது, 10 பெரிய சொத்துக்கள் பினாமி பெயர்களில் உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், பல போலி நிறுவனங்கள் மூலம் பணபரிமாற்றம் நடந்துள்ளதாகவும், அந்த பணம் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் மூலம் கிடைத்த பணம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சி தலைவர்களுடன் ராகுல் காஷ்மீர் பயணம்.. அனுமதி இல்லை என மாநில அரசு கைவிரிப்பு; பரபரப்பு