எங்கள் குடும்பத்தின் உறுப்பினர் யாருக்கும் கணக்கில் காட்டப்படாத ஒரு வங்கிக் கணக்கோ, சொத்தோ,போலி நிறுவனமோ என்று ஏதேனும் ஒன்று இந்த உலகத்தில் இருப்பதற்கான ஆதாரத்தை காட்டத் தயாரா? என மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் குடும்பத்தின் சார்பில் சவால் விடுக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரை சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. அவருக்கு ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது முதலே, அவரது குடும்பத்தினருக்கு வெளிநாடுகளில் ஏகப்பட்ட சொத்துகள் இருப்பதாகவும், வெளிநாட்டு வங்கிகள் பலவற்றிலும் கணக்கு வைத்திருப்பதாகவும் ஆங்கில ஊடகங்களில் தினமும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதற்கான ஆதாரங்கள் என சில ஆவணங்களையும் வெளியிட்டு பரபரப்பை மேலும் அதிகரித்து வருகின்றன.
இதையெல்லாம் கண்டு ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் கொந்தளித்துள்ளனர். இதனால் ப.சிதம்பரத்தின் குடும்பத்தின் பெயரில் இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ப.சிதம்பரத்தின் மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கடந்த சில நாட்களாக பல்வேறு ஊடகங்களில் ப.சிதம்பரத்துக்கு எதிராக எந்தவித ஆதாரமில்லாத செய்திகள் பரப்பப்பட்டு வருவதை மிகுந்த மன அழுத்தத்தோடு குறிப்பிட விரும்புகிறோம்.
ப.சிதம்பரத்தை அச்சுறுத்தும் வகையிலும் அவமானப்படுத்தும் வகையிலும் உள்நோக்கத்தோடும் மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். ஆனால் அரசின் இந்த பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக நிற்க வேண்டிய ஊடகங்களின் நிலையை எண்ணும் போது வருத்தமாக உள்ளது.
சட்டத்தின் முன் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நிரபராதிகள்தான். இதனால் வாய்மை ஒரு நாள் வெல்லும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்திய அரசியலில், ப.சிதம்பரம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கையைக் கொண்டவர். இப்போது நடப்பது போன்ற இழிவுபடுத்தும் பிரச்சாரங்களால் அவர் இந்த தேசத்துக்கு ஆற்றிய அரும்பணிகளை மறைத்துவிட முடியாது.
நாங்கள் ஒரு சிறு குடும்பமாக எங்களுக்கு போதுமான செல்வங்களைப் பெற்றிருக்கிறோம். நாங்கள் அனைவருமே வருமான வரியும் கட்டிக் கொண்டிருக்கிறோம். எனவே எங்கள் குடும்பத்தினர் யாருக்கும் சட்டத்துக்குப் புறம்பான வழியில் பணம் ஈட்டும் தேவையும் அவசியமும் இல்லை.
எனவே தான் எங்களுக்கு பல நாடுகளில் சொத்துக்கள் இருக்கின்றன. பல வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகள் இருக்கின்றன. ஏராளமான போலி நிறுவனங்கள் இருக்கின்றன என்ற செய்திகளையெல்லாம் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறோம். இவ்வாறு வெளியாகும் செய்திகள் எல்லாமே கட்டுக்கதைகள். இவையெல்லாம் பொய் என்பது விரைவில் அம்பலமாகும்.
மேலும், மத்திய அரசுக்கும் இந்த வழக்கு தொடர்பாக சவாலாக ஒன்றை தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் யாருக்காவது கணக்கில் காட்டப்படாத ஏதேனும் ஒரு சொத்து அல்லது ஏதேனும் ஒரு வங்கிக் கணக்கு அல்லது ஏதேனும் ஒரு போலி நிறுவனம் இந்த உலகத்தில் எங்கேனும் இருக்கிறது என்பதற்கான ஆதாரத்தை காட்ட முடியுமா? என சவால் விடுகிறோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஊடகங்களும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்து ஊடக சுதந்திரத்தை நிலை நிறுத்துங்கள். ஊடகங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சட்டம்தான் எப்போதும் பாதுகாப்பு அளிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்பதை வேண்டுகோளாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று ப.சிதம்பரம் குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.