மும்பையில் உள்ள ஓ.என்.ஜி.சி. தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், நவிமும்பையில் மத்திய அரசின் நிறுவனமான எண்ணெய்் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின்(ஓ.என்.ஜி.சி.) தொழிற்சாலை உள்ளது. இங்கு எரிவாயு பிரித்தெடுத்து அனுப்பப்படுகிறது.
இன்று அதிகாலை 6.30 மணியளவில், இந்த தொழிற்சாலையில் மழை நீர் வழிந்தோடும் கழிவு நீர் குழாய் பகுதியில் எரிவாயு தீப்பற்றியிருக்கிறது. காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது. இதையடுத்து, ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் விரைந்து வந்து, எரிவாயுவை குஜராத்தில் ஹாசிரா பகுதியில் உள்ள எரிவாயு தொழிற்சாலைக்கு திருப்பி விட்டனர்.
இதற்கிடையே, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ பரவிய போது தொழிற்சாலையில் பணியில் இருந்த பலரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்களில் 5 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 8 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
எனினும், ஓ.என்.ஜி.சி. தரப்பில் தீ பரவியது குறித்தும், அதை கட்டுப்படுத்தியது மற்றும் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தகவல் வெளியிட்டனர்.