போக்குவரத்து விதிமீறல்... ஹரியானா, ஒடிசாவில் ஒன்றரை கோடி வசூல்

by எஸ். எம். கணபதி, Sep 6, 2019, 09:04 AM IST

ஹரியானா, ஒடிசா மாநிலங்களில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்த 5 நாளில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.1.4 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைபிடிப்பதில்லை. அதனால்தான் விபத்துகள் அதிகமாகின்றன என்று மத்திய அரசு கருதியது. இதையடுத்து, போக்குவரத்து விதிமீறல்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கும் வகையில், மோட்டார் வாகனப் போக்குவரத்து சட்டத்தில் புதிய திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம், செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து, டெல்லியை அடுத்துள்ள குருகிராமில் தினஷே் மதன் என்பவர் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவர் ஹெல்மெட் அணியாததால், போக்குவரத்து போலீசார் அவரை நிறுத்தினர். அவரிடம் டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் எதுவும் இல்லை. அவருக்கு டெல்லி போலீசார் ரூ.23 ஆயிரம் அபராதம் விதித்தனர். தமிழகத்தின் தூத்துக்குடியில் ஒருவருக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஹரியானா, ஒடிசா மாநிலங்களில் புதிய சட்டம் அமலுக்கு வந்த 5 நாளில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.1.4 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹரியானாவில் 343 சலான்கள் மூலம் ரூ.52 லட்சத்து 32,650 வசூலாகியுள்ளது. ஒடிசாவில் 4080 சலான்கள் மூலம் ரூ.88 லட்சத்து 90,107 வசூலாகியுள்ளது. மேலும், 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் சட்டம் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே 39 ஆயிரம் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக உத்தரப்பிரதேசத்தில் 3121, ஜார்க்கண்டில் 1400 சலான்கள் கொடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இதே போல், நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் அபராத வசூல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படி கடுமையாக அபராதம் விதித்து, விதிமீறல்களை குறைப்பதற்காக மோடி அரசை பலர் பாராட்டுகிறார்கள். அதே சமயம், மோடி அரசு எப்போதும் ஏதாவது ஒரு வழியில் மக்களிடம் இருந்து பணத்தை பறிப்பதிலேயே குறியாக இருக்கிறது. மக்களுக்கு சலுகை எதுவும் தருவதாக தெரியவில்லை என்று குமுறுபவர்களும் உண்டு.


Leave a reply