தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று(செப்.9) பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
ஆந்திராவில் இருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. இருமாநிலங்களுக்கும் கவர்னராக நரசிம்மன் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்த டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனை தெலங்கானா கவர்னராக நியமித்து ஜனாபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.
இதைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு தெலங்கானா கவர்னராக தமிழிசை பதவியேற்றார். முன்னதாக, ஐதராபாத் விமான நிலையத்தில் தமிழிசையை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பூங்கொத்து வரவேற்றார். இதன்பின், ஐதராபாத் ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில், கவர்னராக தமிழிசைக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆர்.எஸ்.சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கவர்னராக பதவியேற்றதும் தமிழிசை, தந்தையின் காலில் விழுந்து வணங்கினார். தமிழிசைக்கு தலைமை நீதிபதி, முதல்வர் சந்திரசேகரராவ் உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த பதவியேற்பு விழாவில், தமிழிசையின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி அனந்தன் மற்றும் குடும்பத்தினர், தமிழக பாஜக தலைவர்கள், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வேலுமணி, கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், தேமுதிகவின் சார்பில் பிரேமலதா, சுதீஷ், சமத்துவமக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்பட தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.