தேசிய மாநாட்டு கட்சியின் இரு எம்.பி.க்களுக்கும், விரைவில் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லாவை சந்திக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்று காஷ்மீர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த மாதம் ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டது. இதன் காரணமாக, அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்று கருதி, ஒரு வாரத்திற்கு முன்பே ஜம்மு காஷ்மீரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். மேலும், பிரிவு 370ஐ ரத்து செய்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்த மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகியோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சியின் எம்.பி.க்கள் ஹஸ்நயீன் மசூடி, அக்பர் லோன் ஆகியோர், காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், எங்கள் கட்சித் தலைவர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோரை கடந்த மாதம் 5ம் தேதி முதல் வீட்டுச் சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை சந்திக்க அனுமதி தர மறுக்கிறார்கள். கட்சியின் எம்.பி.க்களான எங்களைக் கூட அவர்களை சந்திக்க விடவில்லை.
எனவே, அவர்களை சந்திக்க அனுமதியளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினர்.
இம்மனுவை நீதிபதி சஞ்சீவ்குமார் விசாரித்தார். பின்னர் அவர் ஸ்ரீநகர் துணை கமிஷனர் சாகித் இக்பாலுக்கு பிறப்பித்த உத்தரவில், இரு எம்.பி.க்களுக்கும் விரைவில் அவர்களின் தலைவர்களை சந்திக்க அனுமதி கொடுக்க வேண்டும். அந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பாக மட்டும் இருக்க வேண்டும். எனவே, சந்திப்புக்கு பின்பு எம்.பி.க்களும் இருவரும் அது பற்றி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.