மகாராஷ்டிரா, அரியானாவில் அக்.21ல் சட்டமன்றத் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Election Commission announced Maharashtra, Haryana poll dates

by எஸ். எம். கணபதி, Sep 21, 2019, 12:59 PM IST

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் அக்டோபர் 21ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சியும், அரியானாவில் பாஜக ஆட்சியும் நடைபெறுகிறது. இந்த 2 மாநிலங்களிலும் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பரில் முடிவடைகிறது. இதையடுத்து, இந்த மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்த அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று பகல் 12 மணிக்கு அறிவித்தார்.
இரு மாநிலங்களிலும் அக்டோபர் 21ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். இரு மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை அக்டோபர் 24ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜகவின் தேவேந்திரநாத் பட்நாவிஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றார். மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 123 இடங்களையும், சிவசேனா 63 இடங்களயும் கைப்பற்றின. காங்கிரஸ் கூட்டணியில் அக்கட்சி 42 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின. ஓவைசி கட்சி உள்பட இதர கட்சிகள் மற்ற இடங்களை கைப்பற்றின.

தற்போது காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மீண்டும் உறுதியாகி விட்டது. காங்கிரஸ் 123, தேசியவாத காங்கிரஸ் 125, மற்றகட்சிகள் 40 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரசில் முன்னாள் முதலமைச்சர் பிருத்விராஜ் சவான், அசோக் சவான், மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட் ஆகியோர் உள்பட 104 வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு விட்டனர்.

ஆனால், பாஜக-சிவசேனா இடையே இன்னும் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. இரு கட்சிகளும் சரிசமமாக போட்டியிட வேண்டுமென்று சிவசேனா கூறுகிறது. ஆனால், அதை பாஜக ஏற்கவில்லை.

You'r reading மகாராஷ்டிரா, அரியானாவில் அக்.21ல் சட்டமன்றத் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை