வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த மாதத்தில் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லியி்ல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேலைவாய்ப்பின்மை விகிதம், ஆகஸ்ட் மாதத்தில் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த 50 ஆண்டுகளில் அதிகமாகும். மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்(சிஎம்ஐஇ) ஆகியவற்றின் அறிக்கைகளில் இந்த புள்ளிவிவரம் வந்துள்ளது.
ஆண்கள் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6 சதவீதமாகவும், பெண்கள் வேலைவாய்ப்பின்மை விகிதம் 17.5 சதவீதமாகவும் உள்ளது. அதே சமயம், சர்வதேச வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.95 சதவீதம் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. எனவே, சர்வதேச சராசரியை விட இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகம்.
அதே போல், கடந்த 2018-19ம் ஆண்டில் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 74 சதவீதம் பேர் பட்டவகுப்புகளில் சேரவே இல்லை. ஆராய்ச்சிப் படிப்புக்கு(பி.எச்டி) வெறும் 0.5 சதவீத இளைஞர்களே பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, ஹவ்டி மோடி போன்ற மேடை நிகழ்ச்சிகளை நடத்துவதை விட்டுவிட்டு, ஹவ்டி வேலைவாய்ப்பின்மை, ஹவ்டி உயர்கல்வி என்ற கேள்விகளுக்கு தீர்வு காண்பதில் பிரதமர் மோடி அக்கறை காட்ட வேண்டும்.
இவ்வாறு ரன்தீப்சிங் கூறியுள்ளார்.