காஷ்மீரில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய தீவிரவாதி ஒசாமா உள்பட 3 தீவிராவதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். இந்த மோதலில் ஒரு வீரரும் பலியானார்.
காஷ்மீரில் ராம்பன் மாவட்டத்தில் நேற்று(செப்.28) காலையில் ஸ்ரீநகர்-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பயணிகள் பேருந்தை மூன்று தீவிரவாதிகள் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், பேருந்து ஓட்டுநர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மூன்று தீவிரவாதிகளும் பாஜக தொண்டர் ஒருவரை பிணைக் கைதியாக பிடித்து கொண்டு ஒரு வீட்டுக்குள் சென்று மூடிக் கொண்டனர். நேற்று வெகுநேரம் அந்த தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடத்திய பாதுகாப்பு படையினர், இறுதியில் மூவரையும் சுட்டுக் கொன்று, அந்த தொண்டரை மீட்டனர்.
சுட்டுக் கொல்லபட்ட மூவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள். அவர்களில் ஒசாமா என்பவர், ஏற்கனவே பாஜக பிரமுகர்கள் அனில் பாரிக்கர், அஜித் பாரிக்கர் ஆகியோர் கொலை வழக்கிலும், ஆர்எஸ்எஸ் பிரமுகர் சந்திரகாந்த் சர்மா, அவரது பாதுகாவலர் ஆகியோரை கொன்ற வழக்கிலும் தேடப்பட்டு வந்தவர். ஹாரூன், ஜாகித் என்ற மற்ற 2 தீவிரவாதிகளும் வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.