கர்நாடகாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, ஜாலப்பா ஆகியோரின் மருத்துவக் கல்லூரிகள் உள்பட 34 இடங்களில் வருமான வரித் துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர்.
கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு நடைபெற்று வந்தது. மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி முதலமைச்சராக இருந்தார். இந்த கூட்டணியில் 17 எம்.எல்.ஏ.க்களை பாஜக இழுத்து, அவர்களை ராஜினாமா செய்ய வைத்தது. இதைத் தொடர்ந்து, குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. இந்நிலையில், 17 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்காத அப்போதைய சபாநாயகர், அவர்களை தகுதிநீக்கம் செய்து தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார்.
தற்போது அந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிட அந்த 17 பேரும் முயற்சி செய்கின்றனர். அவர்களுக்கு சீட் தருவதாக எடியூரப்பாவும் பகிரங்கமாக தெரிவித்து விட்டார். இந்நிலையில், அவர்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் துணை முதல்வராக இருந்த பரமேஸ்வராவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை திடீர் ரெய்டு நடத்தினர். அவருக்கு தொடர்புடைய டிரஸ்ட் நடத்தும் மருத்துவக் கல்லூரி உள்பட 34 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அதே போல், காங்கிரசின் முன்னாள் மத்திய அமைச்சரான ஜாலப்பாவின் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித் துறையினரின் ரெய்டு நடந்தது.
இது குறித்து முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்ட ட்விட்டில், இந்த வருமானவரித் துறை ரெய்டுகள் திட்டமிட்டு காங்கிஸ் மீது நடத்தப்படும் பழிவாங்கும் நடவடிக்கை. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் ரெய்டுகள். இதற்கெல்லாம் காங்கிரஸ் அடிபணியாது என்று கூறியுள்ளார்.