பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா பிடித்துள்ள 5 ஆயிரம் கி.மீ. நிலத்தை காலி செய்ய ஜின்பிங்க்கிடம் சொல்லுங்கள் என்று பிரதமர் மோடிக்கு கபில்சிபில் ட்விட்டரில் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்க்கும் சந்திக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி இன்று மாலை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இரு பெரும் தலைவர்களும் இதற்காக சென்னை வந்துள்ளனர்.
இதற்கிடையே, சீனாவில் 2 நாள் முன்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அதற்கு பிறகு, சீன அரசு வௌியிட்ட அறிக்கையில், காஷ்மீர் நிலவரங்களை கவனித்து வருவதாகவும், இருநாடுகளும் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது.
காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை, இதில் எந்த நாடும் தலையிடக் கூடாது என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில், காஷ்மீர் நிலவரத்தை கவனித்து வருவதாக சீனா கூறியதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது. ஏற்கனவே ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தன்னை வெளிக்காட்டியது.
இந்த சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சீன அதிபர் ஜின்பிங் ஆதரிக்கிறார். எனவே, பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் ஜின்பிங்கை சந்திக்கும்போது இப்படி கேட்க வேண்டும்.
1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா கட்டுப்பாட்டில் வைத்துள்ள 5000 கி.மீ. நிலத்தை காலி செய்ய வேண்டும்.
2. இந்தியாவில் 5ஜி தகவல் தொழில்நுட்ப சேவைக்கு ஹவாய் இருக்காது.
உங்கள் 56 இஞ்ச் மார்பை காட்டி இதைச் சொல்லுங்கள் மோடி
இவ்வாறு கபில்சிபல் பதிவிட்டுள்ளார்.