மாமல்லபுரத்தில் மாலையில் மோடி - ஜின்பிங் சந்திப்பு..

by எஸ். எம். கணபதி, Oct 11, 2019, 22:47 PM IST

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்க்கும் சந்திக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அப்போது அவர்கள் பல்லவர் கால சிற்பங்கள், ஐந்து ரதம், கடற்கரைக் கோவில் உள்ளிட்டவற்றை கண்டு ரசித்தனர்.

இந்த முறைசாரா சந்திப்புக்காக பிரதமர் மோடி, இன்று(அக்.11) பகல் 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தார். அவருக்கு கவர்னர் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவளத்திற்கு காரில் சென்று தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் என்ற நட்சத்திர ஓட்டலில் மதிய உணவு எடுத்து கொண்டார்.

இதற்கிடையே, சீன அதிபர் ஜின்பிங்க் பிற்பகல் 2.15 மணியளவில் தனி விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் வரவேற்றனர். மேலும், பாரம்பரிய முறைப்படி மேளதாளம் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலுக்கு சென்று தங்கினார். மாலையில் அவர் காரில் புறப்பட்டு மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுனன் தபசு பகுதிக்கு சென்றார்.

அங்கு முன்னதாகவே பிரதமர் மோடி வந்திருந்தார். அவர் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து சுத்த தமிழராக மாறியிருந்தார். ஜின்பிங் அங்கு வந்து சேர்ந்ததும் அவரை பிரதமர் மோடி வரவேற்றார். அவர்கள் இருவரைத் தவிர இந்தியாவுக்கான சீன தூதர் சன்வெய்டாங், சீனாவுக்கான இந்திய தூதர் மதுசுதன் ரவீந்திரன் ஆகியோர் மட்டுமே உடனிருந்தனர். அவர்கள், இருபெரும் தலைவர்களுக்கு இடையே மொழிப் பெயர்ப்பாளர்களாக பணியாற்றினர்.

அர்ச்சுனன் தபசு பகுதியில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் நடக்க ஆரம்பித்தனர். அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட இடங்களை இருவரும் பார்வையிட்டனர். அப்போது பல்லவர்கால சிற்பங்களின் பெருமையை ஜின்பிங்கிற்கு மோடி விளக்கினார்.

வெண்ணெய் உருண்டை பாறை முன்பாக மோடியும், ஜின்பிங்கும் கைகளை சேர்த்து உயர்த்தி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அதன்பின்பு, மாமல்லபுரம் ஐந்து ரதம் பகுதியில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து இரு தலைவர்களும் உரையாடியபடி இளநீர் பருகினர். பின்னர் கடற்கரை கோவிலுக்கு சென்று கோவிலை சுற்றிப் பார்த்து ரசித்தனர்.

கடற்கரை கோவில் அருகே கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக அங்கு குண்டு துளைக்காத வகையில் 2 அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு அரங்கத்தில் பிரதமர் மோடியும், ஜி ஜின்பிங்கும் அமர்ந்து பேசியவாறே அருகில் உள்ள மற்றொரு அரங்கத்தில் நடைபெறும் கலாசேத்ரா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியையும், நாடகத்தையும் கண்டு களித்தனர். ராமாயண காவியம் நடன வடிவில் நிகழ்த்தப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு, கலைக் குழுவினருடன் மோடியும், ஜின்பிங்கும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அதன்பின்பு, அந்த அரங்கத்தில் இரவு 7 மணியளவில் விருந்து நிகழ்ச்சி துவங்கியது. உணவு அருந்தியபடியே இரு தலைவர்களும் நீண்ட உரையாடல் நடத்தினர். முன்னதாக, நடந்த ஆலோசனையில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர்.

இதன்பின்பு, மாமல்லபுரத்தில் இருந்து காரில் சென்னை ஐடிசி ஓட்டலுக்கு ஜின்பிங் புறப்பட்டார். அவரை கார் வரை வந்து மோடி வழியனுப்பி வைத்து விட்டு சென்றார்.


More India News