பீகாரில் டெங்கு நோயாளிகளை பார்த்து ஆறுதல் கூற வந்த மத்திய அமைச்சர் மீது இங்க் வீசிய மர்மநபர் தப்பியோடினார்.
பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது, அம்மாநில தலைநகர் பாட்னாவில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
இந்நிலையில், டெங்கு பாதித்த நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, பாட்னாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் நோயாளிகளை சந்தித்து விட்டு வெளியே வந்தார். அப்போது அவர் காரில் ஏறுவதற்கு முன்பு, பின்னால் சென்றவர்களில் யாரோ ஒரு மர்ம நபர், அமைச்சரின் மீது இங்க் வீசினார். அது அவரது சட்டையின் மேலே போட்டிருந்த ஓவர்கோட் முழுவதும் தெளித்து விட்டது போல் படிந்தது.
அமைச்சரும், மற்றவர்களும் சுதாரித்து திரும்புவதற்குள் அந்த மர்ம நபர் ஓட்டம் பிடித்து தப்பி விட்டார். அதன்பின், அமைச்சர் சவுபே கூறுகையில், இது மக்கள் மீது தெளிக்கப்பட்ட இங்க், ஜனநாயகத்தின் மீது வீசப்பட்ட இங்க்.. என்றார். இதன்பின், அவர் அதே உடையில் புறப்பட்டு சென்றார்.