முதல்வர் பதவியில் சிவசேனா பிடிவாதம்.. ஆட்சியமைப்பதில் இழுபறி

BJP, Sena in tug of war to get support of more MLAs in Maharashtra

by எஸ். எம். கணபதி, Oct 28, 2019, 12:29 PM IST

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருந்தாலும், முதல்வர் பதவி கேட்டு சிவசேனா பிடிவாதம் செய்வதால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால், கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு பெற்ற அளவுக்கு கூட இடங்களை பெற முடியவில்லை. 2014ம் ஆண்டு தேர்தலில் பாஜக 122 இடங்களையும், சிவசேனா 63 இடங்களையும் கைப்பற்றியிருந்தன. அப்போது, தேர்தலுக்கு பின், இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.

இந்த முறை இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தும் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்தான் வெற்றி பெற்றுள்ளன. எனவே, கூட்டணி அமைக்காமல் இருந்தால், வாக்குகள் சிதறி, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்திருக்கலாம்.

தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டில் 50:50 என்ற விகிதத்தில் சிவசேனா சீட் கேட்டது. ஆனால், அதற்கு பாஜக ஒப்புக் ெகாள்ளவில்லை. சிவசேனா கட்சியினர் மீது அமலாக்கத் துறை விசாரணை இருந்ததால், பாஜக மறைமுகமாக மிரட்டியும் பார்த்தது. ஆனால், சிவசேனா அதற்கெல்லாம் மசியவில்லை. 50:50 விகிதத்தில் சீட் பிரிக்காவிட்டால் கூட்டணியே வேண்டாம் என்றது. அது மட்டுமில்லாமல், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறியது. அதற்கு பின், பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேரடியாக உத்தவ்தாக்கரேயிடம் பேசினார்.

அப்போது, இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி என்பதற்கு ஒப்புக் கொண்டால், குறைந்த இடங்களில் போட்டியிடுவதாக ஒப்புக் கொண்டது. அதனால், பாஜக 150 இடங்களிலும், அதன் சின்னத்தில் 16 குட்டி கட்சிகளும் போட்டியிட்டன. சிவசேனா 122 இடங்களில் போட்டியிட்டது.

இறுதியில் பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. இதனால், சிவசேனா தேர்தலுக்கு முன்பு பேசியபடி, தனது கட்சிக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்றும், அமைச்சரவையில் சரிபாதி தர வேண்டுமென்றும் பிடிவாதமாக கேட்டு வருகிறது.

காங்கிரஸ் கூட்டணி பலவீனமாக இருப்பதால், எப்படியும் மெஜாரிட்டிக்கு தேவையான 145 இடங்கள் தங்களுக்கு கிடைத்து விடும் என்று பாஜகவினர் நம்பினர். மெகா வெற்றி என்றே முதல்வர் பட்நாவிஸ் பிரச்சாரத்தில் முழக்கமிட்டார். அது நடக்காமல் போனதால், சிவசேனாவை இப்போது சமாளிக்க முடியாமல் போய் விட்டது. அமைச்சரவையில் சரிபாதி கொடுத்தாலும் முதல்வர் பதவியை விட்டுத் தர பாஜக தயாரில்லை.

அதேசமயம், முதல் முறையாக பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து அவரது பேரன் ஆதித்யா தாக்கரே தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார். அவரை முதல்வராக்கியே தீர வேண்டுமென்று உத்தவ் தாக்கரே விரும்புகிறார். சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில், எப்போதும் பாஜகவுக்கு தலையாட்டிக் கொண்டே இருக்க முடியாது. சிவசேனாவின் உரிமைகளை விட்டுத் தர மாட்டேன் என்று பேசியுள்ளார்.

மகாராஷ்டிராவில் நவம்பர் 8ம் தேதிக்கு முன்பாக சட்டசபை பொறுப்பேற்க வேண்டும். எனவே, அதற்குள் ஆட்சியமைக்க வேண்டும். ஆனால், சிவசேனா பிடிவாதத்தால் இது வரை இழுபறி நீடித்து வருகிறது.

You'r reading முதல்வர் பதவியில் சிவசேனா பிடிவாதம்.. ஆட்சியமைப்பதில் இழுபறி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை