சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க முடியாது.. சரத்பவார் பேட்டி

Where is the question of ShivSena-NCP government? Sharad Pawar asked

by எஸ். எம். கணபதி, Nov 6, 2019, 13:32 PM IST

சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் கேள்விக்கே இடமில்லை என்று சரத்பவார் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்தான் வெற்றி பெற்றுள்ளன. எனவே, கூட்டணி ஆட்சிதான் அமைக்க முடியும்.
சிவசேனா கட்சி, முதல்வர் பதவியை பிடிவாதமாக கேட்டு வருகிறது. பாஜகவோ தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று மறுத்து வருகிறது. இதனால், தேர்தல் முடிவு வெளியாகி 13 நாட்களாகியும் இது வரை மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமையவில்லை.

இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை இன்று சந்தித்து பேசினார். இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கப் போவதாகவும், அதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும் பரவலாக பேசப்பட்டது.

ஆனால், இதை சரத்பவார் மறுத்து விட்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் எப்படி கூட்டணி ஆட்சி அமைக்க முடியும்? கடந்த 25 ஆண்டுகளாக பாஜக-சிவசேனா கூட்டணி நீடித்து வருகிறது. இப்போது மக்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளார்கள். அவர்கள் எவ்வளவு சீக்கிரம் ஆட்சியமைக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் ஆட்சியமைக்க வேண்டும். மக்கள் எங்களை எதிர்க்கட்சிகளாக தேர்வு செய்துள்ளார்கள். அந்த கடமையை செய்வோம் என்றார்.

You'r reading சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க முடியாது.. சரத்பவார் பேட்டி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை