சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக இன்று மாலை 4.30 மணிக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்கின்றனர். இதற்கிடையே, பாஜகவினர் குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாக சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டின் போது, சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக பாஜக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், தற்போது பாஜக தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுத் தர மறுத்து விட்டது.
மேலும், சிவசேனாவிடம் அப்படி ஒப்புக் கொள்ளவே இல்லை என்றும் அக்கட்சியினர் பொய் சொல்லுகிறார்கள் என்றும் பாஜக கூறியது. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி முறிந்தது. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.
தற்போது, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைக்க முயன்று வருகிறது. இதற்காக மூன்று கட்சித் தலைவர்களும் பேசி வருகிறார்கள். மேலும், இன்று மாலை 4.30 மணிக்கு மூன்று கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கூட்டாக சேர்ந்து ராஜ்பவனில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு, மழை நிவாரணப் பணிகள் தொடர்பாக கோரிக்கை விடுப்பதற்கான சந்திப்பு என்று அவர்கள் கூறினார்கள். ஆனால், தங்களை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பாரா அல்லது மத்திய அரசின் மூலம் ஏதாவது தடை வருமா என்பதை அறிவதற்காகத்தான் அவர்கள் கவர்னரை சந்திக்கிறார்கள் என பேசப்படுகிறது.
இதற்கிடையே, பாஜக முன்னாள் முதல்வர் பட்நாவிஸ், சிவசேனா அமைக்கும் கூட்டணி அரசு 6 மாதங்கள் கூட தாக்கு பிடிக்காது என்று கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் சந்திரகாந்த் பாடீல் கூறுகையில், பாஜகவுக்கு தற்போது 119 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாகவும், விரைவில் மெஜாரிட்டி ஆதரவுடன் ஆட்சியமைப்போம்என்றும் தெரிவித்திருந்தார்.
இது பற்றி, சிவசேனாவின் சாம்னா நாளிதழில் குறிப்பிட்டு, பாஜகவை கடுமையாக தாக்கி எழுதியுள்ளனர். பாஜக குதிரைப் பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் முயற்சிகள் பலிக்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், சிவசேனா தலைமையில் அமையும் கூட்டணி ஆட்சி நிலையான ஆட்சியாக அமையும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.