முஸ்லிம் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதல் வழக்கில், இந்து திருமணச் சட்டத்தின் கீழ் குடும்ப நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ஐகோர்ட் கண்டித்துள்ளது.
முஸ்லிம் பெண்களுக்கு முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதற்கு தடை சட்டம் கொண்டு வரப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு முஸ்லிம் தம்பதிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. அவர்கள் மோதல் வழக்கு, குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்றது. அதை விசாரித்த நீதிபதி, அந்த பெண்ணுக்கு இடைக்கால ஜீவனாம்சம் வழங்குமாறு கணவனுக்கு உத்தரவிட்டார். இந்து திருமணச் சட்டப்பிரிவின் கீழ் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதை எதிர்த்து கணவன், அலகாபாத் ஐகோர்ட்டுக்கு சென்றார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குடும்ப நல நீதிமன்ற நீதிபதிக்கு சம்மன் அனுப்பி ஆஜராக உத்தரவிட்டனர். ஆனால், குடும்பநல நீதிமன்றத்தில் குறிப்பிட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி பணிமாறுதலில் சென்று விட்டார். அடுத்து பதவியேற்ற நீதிபதிக்கு ஐகோர்ட் சம்மன் சென்றது.
அந்த நீதிபதி மனோஜ்குமார் சுக்லா, ஐகோர்ட்டில் நீதிபதிகள் அனில்குமார், சவுரவ் லவானியா ஆகியோர் முன்பாக ஆஜரானார். அப்போது மனோஜ்குமார் சுக்லா, ஐகோர்ட் நீதிபதிகளிடம், எனக்கு எப்படி நீங்கள் சம்மன் அனுப்பலாம்? ஒரு நீதிபதியின் தீர்ப்பில் தவறு என்றால், நீங்கள் அதை ரத்து செய்யலாம். மாறாக, எப்படி சம்்மன் அனுப்பலாம்? மேலும், குறிப்பிட்ட உத்தரவை பிறப்பித்த நீதிபதி போய் விட்டார். எனக்கும் அந்த தீர்ப்புக்கும் சம்பந்தமில்லை என்ற சத்தம் போட்டு பேசினார்.
இதில் அதிருப்தியடைந்த நீதிபதிகள் அனில்குமார், சவுரவ் ஆகியோர், குடும்பநல நீதிமன்ற நீதிபதியின் செயலை கண்டித்தனர். ஆனாலும், அவர் விடாமல் சண்டை போட்டார். இதையடுத்து, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் மனோஜ்குமாரின் செயலை குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்தனர்.
தீர்ப்பில், மனோர்குமார், இந்த ஐகோர்ட்டின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்டார். நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஒரு நீதிபதியே செயல்படக் கூடாது. ஒரு நீதிபதி தவறான சட்டத்தில் தீர்ப்பு வழங்கினால், அவரை அழைத்து கண்டிக்க ஐகோர்ட்டுக்கு உரிமை உண்டு. தீர்ப்புகள் தவறாக தெரிவது வேறு விஷயம். ஆனால், தவறான சட்டத்தின் கீழ் தீர்ப்பு சொல்வதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டனர்