உத்தவ் தாக்கரே நாளை முதல்வராக பதவியேற்பு.. என்.சி.பி.க்கு துணை முதல்வர்..

ShivSena to have 15 ministers in Maharashtra, Deputy CMs post for NCP

Nov 27, 2019, 20:26 PM IST

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே நாளை மாலை முதலமைச்சராக பதவியேற்கிறார். என்.சி.பி. கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படும் என தெரிகிறது

மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், முதலமைச்சர் பதவியை சிவசேனா கேட்டதால், இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தது.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி செய்தது. இதில், சுமுக உடன்பாடு ஏற்பட்டு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பார் என்று கடந்த 23ம் தேதி மாலையில் என்.சி.பி. தலைவர் சரத்பவார் அறிவித்தார்.

ஆனால், அது வரை அவர்களுடன் அமர்ந்திருந்த சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், நள்ளிரவில் பாஜக பக்கம் தாவினார். அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் கோஷ்யாரி அழைத்தார். முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் மறுநாள் காலையில் அவசர, அவசரமாக பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

இதன்பின், சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டாக தொடர்ந்த வழக்கில், பட்நாவிஸ் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் ஒரேயொரு நாள் அவகாசம் கொடுத்தது. ஆனால், மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது என்பதை பட்நாவிசும், அஜித்பவாரும் உணர்ந்தனர். முதலில் அஜித்பவார், துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, பட்நாவிஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியேற்க வருமாறு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். அவரும் இன்று கவர்னரை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து, நாளை மாலை 6.40 மணிக்கு மும்பை சிவாஜி பார்க்கில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. முதலமைச்சராக உத்தவ் தாக்ரே பதவியேற்கவிருக்கிறார்.

சிவாஜி பார்க் தான் சிவசேனாவுக்கு மிக முக்கியமான ராசியான இடமாக கருதப்படுகிறது. காரணம், 1966ம் ஆண்டில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே, கட்சியை துவக்கும் போது இங்குதான் பிரம்மாண்ட கூட்டத்தை நடத்தினார். மேலும், ஆண்டுதோறும் தசரா விழாவை சிவசேனா இங்குதான் விமரிசையாக நடத்தி வருகிறது. அதனால், இங்கு உத்தவ் தாக்கரே பதவியேற்க உள்ளார். இதுவரை அவர் அரசு பதவியில் இருந்ததில்லை.

சிவசேனா அமைச்சரவையில் அக்கட்சியைச் சேர்ந்த 15 அமைச்சர்கள் இடம்பெறுகிறார்கள். என்.சி.பி. கட்சிக்கு துணை முதல்வர் மற்றும் 13 அமைச்சர்களும், காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியும், 13 அமைச்சர்களும் அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சரவை மற்றும் அரசு அமைப்பது பற்றி, உத்தவ்தாக்கரே, சரத்பவார், அகமது படேல் ஆகியோர் இன்று மாலையில் ஒய்.பி.சவான் ஆடிட்டோரியத்தில் சந்தித்து பேசினர். மேலும், சரத்பவாரை தனியாகவும், காங்கிரசின் கே.சி.வேணுகோபாலை தனியாகவும் உத்தவ் சந்தித்து பேசியுள்ளார்.

பதவியேற்பு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

You'r reading உத்தவ் தாக்கரே நாளை முதல்வராக பதவியேற்பு.. என்.சி.பி.க்கு துணை முதல்வர்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை