மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று நாடாளுமன்றத்தில் பிரக்யா தாக்குர் பேசியதை பா.ஜ.க. இன்று கண்டித்துள்ளது. மேலும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. எஸ்.பி.ஜி. பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நேற்று(நவ.27) தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, பிரதமருக்கு மட்டுமே எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்கப்படும். முன்னாள் பிரதமர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும்.
இந்த மசோதாவின் மீது திமுக உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், அரசியல் காரணங்களுக்காக சிறப்பு பாதுகாப்பை விலக்கிக் கொள்ளக் கூடாது. ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னர் அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பை விலக்கியது தவறு. மகாத்மா காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் நாதுராம் கோட்சே, 32 ஆண்டுகளாக காந்தி மீது ஆத்திரம் கொண்டிருந்ததாக கூறியிருந்தார். அவர் ஒரு குறிப்பிட்ட மதக் கொள்கையை கடைபிடிப்பவர். அதனால், அவர் தனது விரோதத்தை பல ஆண்டுகளாக வைத்திருந்தார்... என்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, பாஜக உறுப்பினரான சாது பிரக்யா தாக்குர் குறுக்கிட்டு, நீங்கள் ஒரு தேசபக்தரை(நாதுராம் கோட்சே) உதாரணமாக சொல்லக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். உடனே, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து, பிரக்யா தாக்குர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு, பாஜக உறுப்பினர்கள், பிரக்யாவை அமைதிப்படுத்தி உட்கார வைத்தனர்.
இந்நிலையில், மக்களவையில் இன்று இந்த விவகாரம் வெடித்தது. இதற்கிடையே, பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பிரக்யாவின் கோட்சே பேச்சை பாஜக ஏற்கவில்லை. அவர் பேசியதை கண்டிக்கிறோம். அவர் இந்த கூட்டத் தொடர் முழுவதும் பாஜக எம்.பி.க்கள் கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்துள்ளோம். அவர் பேசியது பாஜகவின் கொள்கையே அல்ல என்று கூறியிருக்கிறார்.
மேலும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவில் இருந்தும் பிரக்யா தாக்குர் நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவரை நியமித்த போதே பலத்த எதிர்ப்பு நிலவியது. காரணம், முன்பே அவர் காந்தியை மோசமாக விமர்சித்திருந்தார்.